சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி கையூட்டு! முறைகேடு செய்த அனைவரையும் கைது செய்க!

தமிழக சத்துணவுத் திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகக் குழந்தைகளின் பசிப்பிணியை போக்க, ஓரளவு நிவாரணம் அளிக்கும் இந்த மனிதநேயத் திட்டத்திலேயே பெரும் பணம் முறைகேடாக விளையாடியிருக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவிலும் ஊழல் நீக்கமற நிறைந்திருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

சமூக நலத்துறையின் நலத்திட்டமாக செயல்படும் மதிய உணவுத்திட்டத்திற்கு நாமக்கல்லில் செயல்படும் கிறிஸ்டி பிரைட்கிராம் என்ற நிறுவனம் உணவுப்பொருட்கள், பருப்புகள் மற்றும் பாமாயில் போன்றவற்றை சப்ளை செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் வருமானவரித்துறை பல ஆவணங்களை அந்த நிறுவன வளாகத்தில் கைப்பற்றியது.

இந்த ஆவணங்களில் பல ஆண்டுகளாக, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அதிகாரிகளின் உறவினர்கள் உள்ளிட்டு பலருக்கு முறைகேடாக பணம் கோடிக்கணக்கில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறைகேடான சில பணப்பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாகவே நடைபெற்றுள்ளன.

விதிமுறைகளுக்கு மாறாக, பணம் கைமாறி, உணவுப்பொருட்கள் சப்ளை நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதற்கான ஒப்பந்ததாரரான கிறிஸ்டி பிரைட்கிராம் நிறுவனம் முறைகேடுகள் குறித்த புகார்களால் கர்நாடக அரசின் கறுப்புபட்டியலில் உள்ளது. அதன் மீதான பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன.

தமிழக சத்துணவு திட்டத்தில் இலஞ்சமாக பணம் பெற்றவர்களுக்கு வருமான வரித்துறை சம்மன்கள் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் போன்று சத்துணவுத் திட்டத்தில் நடந்துள்ள பல்லாயிரம் கோடி ஊழல் வெளிவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட யார் இந்த ஊழலோடு தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்களை பதவி நீக்கம், பணிநீக்கம் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...