சமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்

முன்னுரை

தமிழக மக்கள் தொகையில் 20.01% பட்டியல் சாதியினர். இது தேசிய விகிதத்தை விடக் கூடுதலானதாகும். திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகை முப்பது சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

பட்டியல் சாதியினரில் மூன்றில் இரண்டு பேரும், பட்டியல் பழங்குடியினரில் ஐந்தில் நான்கு பேரும் கிராமங்களில் வசிக்கிறார்கள்.

கிராமங்களின் பிரதான வாழ்வாதாரம் நிலம். ஆனால் பட்டியல் சாதியினர் மக்கள் தொகையில் வெறும் ஆறு சதமானோரிடம் மட்டுமே நிலங்கள் உள்ளது.

இதன் காரணமாக பட்டியல் சாதியினரின் பொருளாதார சார்ப்புநிலை அவர்களை பலகீனப்படுத்துகிறது.

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களாகவே மிகப்பெரும்பாலான பட்டியல் சாதியினர் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் கிராமத்தில் அதிகம் நிலம் வைத்திருக்கிற ஒரு சில பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள்  விவசாயம் சார்ந்த தொழில்கள், ஒப்பந்தம், வட்டி ஆகியவற்றின் மூலமாக கிராமங்களின் புதிய பணக்கார வர்க்கமாக மாறியிருக்கிறது.

இவர்களே பிரதான அரசியல் பிரதிநிதியாகவும், சாதி ஆதிக்கம் மற்றும் பெருமிதங்களின் மையமாகவும் இருக்கிறார்கள். இவர்களைச் சுற்றியே கிராமத்தின் சாதி ஆதிக்க மனநிலை கட்டமைக்கப்படுகிறது.

இந்நிலைமைகள் பட்டியல் சாதியினரின் உரிமைகளைக் கட்டுப்படுத்துகிறது. உரிமைகளைக் கோரினால், பயன்படுத்த முற்பட்டால் வன்கொடுமைகளை எதிர்கொள்ள நேர்வது என்பதாக அவர்களின் சமூக நிலை உள்ளது.

தீண்டாமை, வன்கொடுமை என்கிற மனிதத் தன்மையற்ற கொடுமைகளில் இருந்து பாதுகாத்திடவும், பொருளாதார சுயசார்பை ஏற்படுத்திடவும் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட சட்டங்கள், திட்டங்களால் அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் உறுதிப்பாடு இன்மையால் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூக நீதி சாசனம் அறைகூவல் விடுக்கிறது.

கல்வி, வேலை, நிலம், தொழில், வர்த்தகம் என அனைத்திலும் பட்டியல் சாதியினர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக 2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூக நீதி சாசனம் வெளியிடப்படுகிறது.

கே.சாமுவேல்ராஜ்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

சமூக நீதி சாசனம்

வன்கொடுமைகள் ஒழிப்பு

உயிர்கள் பறிக்கப்படுவது, வீடுகள் எரிக்கப்படுவது, உடமைகள் அழிக்கப்படுவது என்பன உள்ளிட்ட வன்கொடுமைகள் தமிழகம் முழுவதும் நடந்தேறி வருகின்றன.

வன்கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் (வன்கொடுமைகள்) தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அதன் ஒவ்வொரு எழுத்தையும் அந்த எழுத்துகளின் வழியாக வெளிப்படுகிற உணர்ச்சியையும் புரிந்து கொள்ளும் வகையில் அமலாக்கப்பட வேண்டும்.

உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா, பாதிக்கப்பட்ட வர்களுக்கு  உரிய பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்து  உரிய அலுவலர்  ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  குற்றம் இழைத்துள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும்  தண்டனையிலிருந்து தப்பி விடாதவாறு உரிய நீதிமன்ற நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். கடமை தவறிய  காவல் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எஸ்சி / எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி,  தமிழக முதலமைச்சர் தலைமையிலான   விழிக்கண் குழுவின் கூட்டத்தை  உரிய இடைவெளிகளில் நடத்திட வேண்டும். மாவட்ட அளவிலும் விழிக்கண் மற்றும் ஆதி திராவிட நலக்குழுக் கூட்டங்களை முறையாக நடத்திட வேண்டும்.  இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு  அறிக்கைகள்  வெளியிடப்பட வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதி, நிலம், நிவாரணம் மற்றும் அரசு வேலையை போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தாமதமின்றி வழங்கிட வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி,  பதிவு செய்யப்படுகிற பல வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவது குற்றவாளிகள்  தப்பிப்பதற்கே வழிவகை செய்யும்.  60 தினங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, 120 தினங்களில் வழக்கை முடித்திட வேண்டும்.

எஸ்.சி.,/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் 4 (5)ன் படி பாதிக்கப்பட்டவர்கள் கோருகிற  வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 6 சிறப்பு நீதிமன்றங்களே உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமைத் தடுப்பு  சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பகுதிகளில், பிரச்சாரம், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணம் உள்ளிட்ட சட்டத்தின் மற்ற அம்சங்களையும் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் கண்காணித்து நெறிப்படுத்திட வேண்டும்.

துவக்கப்பள்ளி  முதல் பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு பாடங்களை சேர்ப்பது, சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூகப் பிரச்சார இயக்கங்களுக்கு அரசு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். சமூக நீதி பாரம்பரியத்தை வலியுறுத்துகிற நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசே நிதியுதவி செய்து நடத்திட வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு

மனித மாண்புக்கு எதிரான, குடிமைச் சமூகத்தின்  உரிமைகளை மறுக்கிற,  தீண்டாமை வடிவங்கள் தமிழகத்தில் நூற்றுக்கும் மேலாக இருக்கின்றன என்பதை  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முழு வேகத்தில்  அரசு மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். 

சாதி மறுப்புத் திருமணங்கள்

தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் அதிர்ச்சி தரத்தக்க அளவில் நிகழ்ந்து வருகின்றன.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் சாதி ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்திட தனிச் சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும்.

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட று.ஞ சூடி 26991 என்கிற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 12.04.20116 அன்று வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேர தொலைபேசி எண்ணுடன் சிறப்புப் பிரிவுகள் செயல்படுவது உள்ளிட்ட  தீர்ப்பின் வழிகாட்டல்கள் அனைத்தையும் செயல்படுத்திட வேண்டும்.

மணமக்களில் ஒருவர் பட்டியல் சாதியினராக அமைகிற சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு ரூபாய் மூன்று லட்சமும் மற்ற கலப்பு திருமணத் தம்பதியர்களுக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கப்பட வேண்டும். 

சாதி மறுப்புத் திருமணம்,  கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பக பதிவுகளில் மட்டும் முன்னுரிமை இருப்பதைப் போல அரசுப் பணிகளுக்கான  தேர்வுகளிலும் முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டும்.

கல்வியில் இட ஒதுக்கீடு  

கல்வி மறுப்பு என்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு  பெரும் அவமானமே.

நீட் தேர்வின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்பட்டோருக்கான சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் குழந்தைக் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் நல விடுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், பிற்பட்டோருக்கு 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்திட வேண்டும்.

ஐ.ஐ.டி அனுமதிகளில்- இளங்கலை, முது கலை, ஆய்வுப் பட்டப்படிப்பு  பிரிவுகளில் – பட்டியல் சாதியினர், பட்டியல் சாதி பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் உறுதியாக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் துணைத் திட்ட நிதியை பயன்படுத்தி சிறப்பு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளைத் திறக்க வேண்டும்.

உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதி பழங்குடி மாணவர்க் கான ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

‘சீர்மிகு நிறுவனங்கள்’ (CENTRE FOR EXCELLENCE) என அறிவிக்கப்படுவதன் வாயிலாக இடஒதுக்கீட்டு சதவீதம் பறிக்கப்படுகிற, பாதிக்கப்படுகிற அபாயம் தடுக்கப்பட வேண்டும். 

கல்வி உதவித் தொகை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்  டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிமுகம் செய்த அரும் பயன் இது.

பள்ளி இறுதி வகுப்புக்குப் பிறகான கல்வி உதவித் தொகை (POST MATRIC SCHOLORSHIP)  மத்திய அரசின் பங்களிப்பு உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் ஏற்படும் தாமதம் மாணவரின் கல்வியை பாதிக்கிற நிலைமை அடியோடு மாற்றப்பட வேண்டும்.

தமிழக அரசாணை  எண் : 92 வெளியிட்ட நாளில் இருந்து கல்விக் கட்டண உதவித் தொகை பெறாமல் படித்து முடித்த, மாணவர்களுக்கும் அத் தொகை வழங்கப்பட வேண்டும்.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டை நீர்க்கச் செய்வதும், மறுப்பதும், ஒழிக்க முனைவதுமான நடவடிக்கைகள் இன்று அதிகரிக்கின்றன.

தமிழகத்தின் பட்டியல் சாதியினரின்  மக்கள் தொகை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், 18 சதவீத இடஒதுக்கீடு தான் பட்டியல் சாதியினருக்குத்  தொடர்கிறது. மக்கள் தொகை அதிகரிக்கிறபோது, ஒவ்வொரு கணக்கீட்டுக்குப் பிறகும், இடஒதுக்கீடு தானாகவே அதிகரிக்கும் வகையில்  விதிகள்  மாற்றப்பட வேண்டும். 

அனைத்து மாநில அரசுத் துறைகளிலும், மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களிலும் உள்ள  பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினருக்கான நிலுவைக் காலியிடங்களை  உடனடியாக நிரப்பிட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் அரசுத் துறை வாரியாக, நிறுவன வாரியாக ரோஸ்டர் காலியிடங்கள் கணக்கிடப்பட்டு பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான  நிலுவைக் காலியிடங்களை நிரப்ப சிறப்புப் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அதன் அமலாக்கம் முறையாக செய்யப்படு வதையும் உறுதி செய்ய வேண்டும்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு முறையாக  எல்லா அரசுத் துறைகள், அரசு நிறுவனங்களிலும் அமலாவதை உறுதி செய்ய வேண்டும்.

பௌத்தம் தழுவிய பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர்க்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தலித் கிறித்தவர்களை  பட்டியல் சாதியினராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தனியார்மயம், பங்கு விற்பனைக்கு ஆளாகிற அரசு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் துணை நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பறிக்கப்படாமல் தொடர்வதை, அமலாவதை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாது. அவை நிரப்பப்படாமல் தொடர்வதையும் அனுமதிக்கக் கூடாது. நிரப்பப்படாத நிலுவைக் காலியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியல் சாதியினர் – பட்டியல் பழங்குடியினர்க்கு இடையே மாற்றிக் கொள்கிற ஏற்பாடு வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் உச்சபட்ச நிர்வாகப் பணிகள் வரை பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திட வேண்டும்.

இட ஒதுக்கீட்டைப் பறிக்கிற தனியார்மயம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும்.  இடஒதுக்கீடு அமலாகிற தகவல்களை அரசு, அரசு நிறுவனங்கள் தங்களின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியல் இடங்களிலும் இடம் பெறுகிற நடைமுறை சரிவர அமலாவதையும், கட் ஆப் மதிப்பெண்கள் பொது வெளியில் முழுத் தேர்வுப் பட்டியலொடு வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி அலுவலர் நலனுக்கான சிறப்பு பிரிவுகள் எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும் செயல்படுவதையும், நேர்காணல், தேர்வுக்கான குழுக்களில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி அலுவலர்கள் இடம் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஐ.ஐ.டி களில் பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை முழுமையாகவும், பகுதியாகவும் ஒழிப்பதற்கான மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்திட மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும்.

மத்திய பல்கலைக் கழகங்களின்  பேராசிரியர் பணி  நியமனங்களில் நிலுவைக் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்த வேண்டும். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இருந்தும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும்.

பட்டியல் சாதிகள், பழங்குடிகளுக்கு நிர்வாக உத்தரவுகள் வாயிலாக அமலாகி வரும்  இடஒதுக்கீட்டை , சட்டரீதியானதாக மாற்ற வேண்டும். அதற்கான  சட்டத்தை மத்திய அரசு உடனே  இயற்ற வேண்டும்.   

மனிதக் கழிவு அகற்றுவோர் விடுதலை

மனிதக் கழிவு அகற்றுவோர் பணி அமர்த்தத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தை,  மத்திய அரசு இயற்றி 8 ஆண்டுகள்  கடந்த பின்பும் தமிழக  அரசு இன்னும்  சட்டத்திற்கான  மாநில விதிகளை  உருவாக்காமல் இருக்கிறது.  உடனடியாக  விதிகளை உருவாக்கிட  வேண்டும்.

மனிதக் கழிவு அகற்றுவோர் பணி அமர்த்த தடை  மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் – 2013ன் படி,  சாக்கடையில் மனிதர்களை இறக்குவதும், மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்ற வைப்பதும் குற்றம் என்றாலும் அக்குற்றத்தை  மத்திய அரசின்  இரயில்வே துறையும் மாநில அரசின் உள்ளாட்சித் துறையும்  தொடர்ந்து  செய்து வருகின்றன. இக்கொடுமைகள்  உடனடியாக தடை செய்யப்பட  வேண்டும்.

கோவில் திருவிழாக்கள்  மற்றும் மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் திறந்தவெளிகள் கழிப்பிடமாக  மாறுவதும், கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை  பயன்படுத்துவதும் தடை செய்யப்பட வேண்டும். நிகழ்வை நடத்துவோர் இதற்கான தனித்த ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்துவதை முற்றாக தடுத்து ‘மனிதக் கழிவு அகற்றுவோர் பணி அமர்த்தத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சிறப்புச் சட்டம் 2013’’ ன் படி மாற்றுத் தொழில் வழங்கி மறுவாழ்வை உறுதிப்படுத்திட வேண்டும்.

பாதாள சாக்கடைகள், தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவு நீர் தொட்டிகள் ஆகியவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம் என சட்டம் இருந்தாலும் மனிதர்களை ஈடுபடுத்துவது தொடர்கிறது. மனிதத் தன்மையற்ற இக்கொடுமையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

மனித மாண்புகளை சீர்குலைக்கும் இதுபோன்ற கொடுமைகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம் என்பதை அனைத்துப் பகுதி மக்களும் அறியும் வகையில் அரசு பிரச்சாரங்கள் செய்திட வேண்டும்.

நிலம், பஞ்சமி நில மீட்பு, பட்டா

உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கான அடிப்படையான ஆற்றலை வழங்குவது நிலமே. 

உறுதியான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பட்டியலின பழங்குடி மக்கள் கையில் நிலம் கிடைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் குறிப்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பஞ்சமி நிலங்கள் குறித்து பயனாளிகள் மனுக்கள் பெற, ஆவணங்கள் சரிபார்க்க,  நில ஒப்படைப்பு செய்திட குறிப்பிட்ட காலத்திற்கு வட்டாட்சியர் அளவில் மாதத்தில் ஒரு நாள்  பஞ்சமி நில குறைதீர்ப்பு நாள் அறிவித்து பஞ்சமி நிலங்கள் மீதான பட்டியலினத்தவர்கள் உரிமையை  நிலைநாட்ட வேண்டும்.

அரசு தரிசு நிலங்கள் மக்களின் பொதுச் சொத்து என்பதால் வட்டம் வாரியாக தற்போதுள்ள அரசு தரிசு நிலங்களை வெளிப்படையாக அறிவித்திடவும் அதில் நிலமற்ற பட்டியல் சாதியினர், பழங்குடி மக்களுக்கான  உரிய பங்கை பெற்றுத்தர வேண்டும். நீண்டகால வாழிடங்களாக உள்ள, மனைகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.

நகர் வாழும் உரிமை      

மாநகரத்தை நிர்மாணிக்க தங்களை அர்ப்பணித்த அடித்தள மக்களுக்கு நகர் மீதான உரிமை மறுக்கப்படுவது பெரும் அநீதியாகும்.

தலித் அல்லது பழங்குடியினரை அவர் இருக்கும் இடத்திலிருந்து அகற்றும் வன்கொடுமை கைவிடப்பட வேண்டும்.  சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தலித் மக்களின் குடிசைகள் அகற்றப்படல் நிறுத்தப்பட வேண்டும். வேறு வழியே இல்லாத நிலையில் குடிசைகள் அப்புறப்படுத்தப்படுத்த வேண்டி வந்தால், அதே இடத்தில் அல்லது அதன் அருகிலேயே இலவசமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தந்தபிறகும், குழந்தைகளின்  கல்வி சேதப்படாமல் மாற்றுப் பள்ளிகளில் சேர்த்தப்பிறகே குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இதுநாள் வரை மாநகரங்களை விட்டு வெளியே குடியமர்த்தப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட  அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்துவதோடு, குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்புகளையும் உறுதிப்படுத்திட சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.  

பட்டியல் சாதி பழங்குடியினர் துணைத் திட்டங்கள்

மக்கள் தொகையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் சதவீதத்திற்கேற்ப திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

முகமை அமைச்சகம் நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கான கண்காணிப்பை உறுதி செய்வதற்கான  அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

துணைத் திட்டங்களின் பயன்பாடு பற்றி பத்தாண்டு அனுபவத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். இழந்த ஒதுக்கீடுகளை ஈடுகட்டுகிற வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.

துணைத் திட்ட அமலாக்கத்திற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். திட்டத்தின் இலக்குகளை எட்டத் தவறுகிற அதிகாரிகள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

இலவச உழைப்பு 

‘குடி ஊழியம்’ ‘சுதந்திரம்’  ஆகிய பெயர்களில்  கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதும் சலவை, மயானப் பணிகள் உள்ளிட்ட  பணிகளைச்   செய்யவில்லை என்றால்,  வன்முறையில் ஈடுபடுவதும்,  கிராமத்தைவிட்டே வெளியேற்றுவதும், சமுக புறக்கணிப்பு செய்வதும்  தொடர்கிறது  இக்கொடுமைகளின் மீது  சட்டப்படியான  உறுதியான  நடவடிக்கைகள்  மேற்க்கொள்ள  வேண்டும்.

‘குடி ஊழியம்‘ என்ற  பெயரில் தமிழகம்  முழுவதும் கொடுமைக் குள்ளாகி  வருவோர் அனைவரையும்  விடுவித்து  மறுவாழ்வு அளித்திட வேண்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

சாதி முறைமையின் மிக வெளிப்படையான குறியீடாக, கோவில் கருவறைகளில்  யார் பிரவேசிப்பது என்பது  உள்ளது.  கேரள மாநில அரசைப்போல்  அனைத்து சாதியினரையும்  அர்ச்சகர்களாக்கி, சாதி  இழிவுகளை ஒழித்திட வேண்டும்.

சமத்துவ மயானம்

‘சாதிக்கொரு மயானம்’ அமைப்பதற்கு அரசின் உள்ளாட்சி அமைப்புகளே  நிதி ஒதுக்கீடு செய்வது சாதிய பாரபட்சங்களை அரசே நிலைநிறுத்துவதாகும். மரணத்திலும் சாதியை நிலைநிறுத்துகிற ‘சாதிக்கொரு  மயானம்’ என்ற நிலையை மாற்றி,  தமிழகத்தின் பேரூர்கள், கிராமங்கள் அனைத்திலும் சமத்துவ மயானங்கள் அமைத்திட வேண்டும். தலித்துகளின் இறந்த உடல்கள் பொதுப் பாதை வழியே செல்வதற்கு உள்ள சாதியத் தடைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

தாட்கோ வங்கி

பயனாளிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதற்கும் விரைவான வங்கிக்கடன் வழங்கப்படுவதற்கும் கண்ணியமான முறையில் கடன் பெறுவோர் நடத்தப்படுவதற்கும் சிறப்பு தாட்கோ வங்கிகள் உருவாக்கப்பட வேண்டும். கடன் நாடுவோர் அலைக்கழிக்கப்படுவதும் விண்ணப்பங்கள் மறுக்கப்படுவதும் கடன் வழங்கல் மிகுந்த தாமதத்துக்கு உள்ளாவதுமான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். 

தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு பாகுபாடு 

தலித் ஊராட்சித் தலைவர்கள் செயல்பாடுகள் முடக்கப்படுவது, ஊராட்சி நிர்வாகம் முழுக்க சாதி இந்துக்களால் கைப்பற்றப்படுவது, தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவது, தலைவர் நாற்காலியில் அமரவிடாமல் தடுப்பது, பெயர் பலகை வைக்கவிடாமல் தடுப்பது, ஊராட்சித் திட்டங்களை சுதந்திரமாக செயல்படுத்த விடாமல் முடக்குவது உள்ளிட்ட பன்முகப் பாரபட்சங்களுக்கு உள்ளாவதும் உரிமைகளை நிலைநாட்ட முயன்றால் தாக்கப்படுவதுமாக அநீதிகள் தொடர்கின்றன. இக்குற்றங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தலித் ஊராட்சித் தலைவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். 

கேரளாவில் வழங்கப்படுவதைப்போல் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மாதச் சம்பளம் ரூபாய் 10,000/- வழங்கிட வேண்டும்.

தொழில் முனைவோர் நலன்

தொழில் பூங்காக்கள், அரசு கொள்முதல், அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அம்சங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர்க்கு உரிய பங்கு கிடைத்திடுவதை உறுதி செய்ய வேண்டும்.

வங்கிக் கடன், அரசு மானியங்கள் ஆகியவற்றில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு உரிய  பங்கு கிடைத்திட வேண்டும். 

தலித் பெண்கள் நலன்

சாதி, பாலின, வர்க்க ஒடுக்குமுறைகள் என்று மூன்று வகையான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கிறார்கள் தலித் பெண்கள். கும்பல் வல்லுறவு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஆகிய குற்றங்களுக்கு இரையாக்கப்படுபவர்கள் பெரும்பாலோர் தலித் பெண்களும் சிறுமிகளுமே ஆவர். பணியிடங்களில் நடைபெறுகிற பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், சீண்டல்களுக்கும் அவர்களே அதிகம் ஆளாகின்றனர். பொதுக் கழிப்பிடங்கள் இல்லாமையால், இரவு நேரங்களில் பாலியல் வன்முறைக்கும், சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட  நவீன கொத்தடிமை முறைகளுக்கும் ஆளாகின்றனர். அவற்றைத் தடுக்க அரசின் உறுதியான நடவடிக்கைகள் தேவை.  

தொகுப்பு வீடுகள்

ஒவ்வொரு ஆண்டும் புதிய தொகுப்பு வீடுகள் கட்டப்படுவதையும் பழுதடைந்த பழைய தொகுப்பு வீடுகளை மராமத்து செய்திடவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம்

இந்தத் திட்டத்திலும் தலித் மக்களுக்கு பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன.   தனி இடங்களில் தனி நாட்களில் வேலை வழங்குவது, கடினமான பணிகளில் ஈடுபடுத்துவது. குறைவான நாட்கள்  வேலை வழங்குவது. தனி பானைகளில் தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட பல  பாரபட்சங்களுக்கு தலித் மக்கள் ஆளாகின்றனர். இவைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு பாகுபாடுகள் கலையப்பட வேண்டும்.  

பொதுவிநியோக கடைகள் 

கிராமப்புறங்களில் பெரும்பாலான  பொது விநியோகக் கடைகளில் தலித் மக்களுக்கு தனி வரிசை,  தாமதமாக பொருள்கள் வழங்குதல், தரம் குறைந்த பொருள்கள் வழங்கல் எனும் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன. இவைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

வாழிடம் – அடிப்படைத் தேவைகள்

குடியிருப்புகளின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, சுகாதாரம், நூலகம், கல்வி நிலையம் உள்ளிட்டவற்றை  தலித்துகளின் குடியிருப்புகளில்  ஏற்படுத்துவதில் அரசே சாதியப் பாகுபாட்டோடு நடந்து கொள்வது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.      

பள்ளிகளில்   தீண்டாமை

சத்துணவு கூடத்துக்கு செருப்பு அணிந்து வந்த குழந்தையின் மீது தாக்குதல், தலித் சத்துணவு சமையலர் சமைக்கத் தடை, சமைத்த உணவை சாப்பிட மறுப்பு, தலித் குழந்தைகளுக்கு தனித் தட்டுகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யுமாறு  தலித் குழந்தைகளை கட்டாயப்படுத்துதல். தலித் மாணவர்களை சாதியரீதியாக இழிவுபடுத்தி கிண்டல் செய்தல் ஆகிய தீண்டாமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வட்டிக் கொடுமை

சமூகத்தில் பொதுவாக ஏழைகள் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளாகின்றனர். அவர்களில் அதிகமானோர் தலித்துகள்.  வாங்கிய கடன் தொகையைவிட இருமடங்கு வட்டியாக செலுத்திய பிறகும், வாங்கிய அசல் கடன் அப்படியே இருப்பதால் தற்கொலை செய்து கொண்டோர் உண்டு. கடன்பட்டவர் தலித் என்றால் அவரை பொது இடத்தில் இழிவுபடுத்துகிறார்கள். தற்போது உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் கந்து வட்டிக்காரர்களுக்கு இணையாக நுண்நிதி நிறுவனங்களும் கொடுமைப்படுத்துகின்றன. கந்துவட்டி தடைச் சட்டத்தை கடுமையாக நிறைவேற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடன்கள் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வைக்க வேண்டும்.

கிராம பொதுச் சொத்துகள்

கிராமங்களில் அரசின் பொதுச் சொத்துகளாக இருக்கிற, மீன்பாசி, ஏரி மற்றும் கண்மாய்களில் உள்ள மரங்கள், சாலை மற்றும் தோப்புகளில் உள்ள மரங்களின் மேல்மகசூல் ஆகிய ஒப்பந்தங்களில் தலித்துகள் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

ஆணையங்களை ஆற்றல்படுத்துதல்

பட்டியல் சாதியினர் ஆணையம், பழங்குடியினர் ஆணையம், மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கி, அதிகாரம் படைத்த அமைப்புகளாக மாற்ற வேண்டும்.

பழங்குடியினர் நலன்

தமிழ்நாட்டின்  பழங்குடிகளான  புலையன்,  வேட்டைக்காரன், மலையாளிகள், குறவன் பழங்குடியினர், பன்னியாண்டிகள் உள்ளிட்டோருக்கு குடியிருப்பு பகுதி முகாம்களின் வாயிலாக,  குடும்ப அட்டைகள்,  இனச் சான்று அட்டைகள்  வழங்கப்பட வேண்டும். கோட்டாட்சியர்  மாதம் ஒரு நாள்  சான்றிதழ் முகாம் நடத்தி,  முழுமையாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

மெய்த்தன்மை அறிதல் என்று அலைக்கழிக்கப்படுவது- பணி ஓய்வின்போது தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்வது, பணப்பலன்களை  அளித்திட மறுப்பது, இவைகளுக்கெல்லாம்- பணியில் சேரும்போதே மெய்த்தன்மை அறிந்தால் போதுமானது என்று அரசு அறிவித்திட வேண்டும்.

தமிழகத்தில் வாழும் பழங்குடியினரில் 80 சதவீதத்தினர் நிலமற்றவர்களாவர். அரசு தரிசு நிலங்களில் தலா 2 ஏக்கர் நிலம் இவர்களுக்கு வழங்கிட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வன உரிமைச் சட்டம் 2006ன் படி உடனடியாக சிறப்பு அதிகாரிகள் சிறப்பு  முகாம்களை நடத்தி, 3 மாத காலத்துக்குள் நில உடமைப் பட்டா வழங்கிட வேண்டும். இச்சட்டத்தினை முழுமையாக அனைத்து மாவட்டங்களிலும் முறையாக அமல்படுத்திட வேண்டும்.

பழங்குடி மக்கள் அனைத்து குடும்பங்களுக்கும் நபர் ஒன்றுக்கு மாதம் அரிசி, 2 கிலோ கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கிட வேண்டும்.

2021 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் – பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்திட வேண்டும். அதே போல் முறையான மற்றும் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்.

கேரளா அரசு போல் தரமான, அரசின் இலவச வீடுகள், ரூபாய் 6 லட்சம் செலவில், வீடற்ற அனைத்து பழங்குடி மக்களுக்கும் கட்டித்தர வேண்டும்.

வீட்டு மனை இல்லாத அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும் உடனடியாக வீட்டு மனைப்பட்டாவுக்கான இடம் தேர்வு செய்து அரசு வழங்கிட வேண்டும்.

மலைப்பகுதிகளில் வருவாய் துறையின் கீழ் உள்ள அனுபவ நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பட்டா வழங்கிட தடையாக உள்ள அரசாணை எண் 1168/1989 ஐ ரத்து செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில், பழங்குடி மக்கள்  வாழும் பகுதிகளில், மலைவாழ் மக்களது நிலங்களை பிற சமூகத்தினர் வாங்கவோ,  விற்கவோ அனுமதி இல்லை என்பதை நடைமுறைச் சட்டமாக்கிட வேண்டும்.

புதிரை வண்ணார்  நலன்

தமிழகத்தில் உள்ள சேரி வண்ணார் (புதிரை வண்ணார்) இன மக்களுக்கு பட்டியலினத்தவர் சாதி (SC) பட்டியல் அரசிதழில் வரிசை எண் 60ல் உள்ளவாறு புதிரை வண்ணார் என சாதிச் சான்று  தடையின்றி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாதியின் அடிப்படையில் புதிரை வண்ணார் மக்களை இனம் கண்டு முறையான கணக்கெடுப்பு செய்து புதிரை வண்ணார் மக்கள் தொகை விகிதாசாரத்தை அரசிதழில் வெளியிட வேண்டும்.

அரசு 2009ல்  அறிவித்த  புதிரை வண்ணார் நல வாரியத்தை செயல்பட வைக்கவும், புதிரை வண்ணார் நல வாரியத்தில் கிறிஸ்துவ புதிரை வண்ணார்களையும் உறுப்பினராக சேர்க்கவும்  அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர்

புதிதாக அமையும் மாநில அரசு, மக்கள் தொகையில் 21 சதவீதமாக உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வுரிமை, அவர்களின் மீதான வன்கொடுமை – தீண்டாமை, துணைத் திட்டங்களின் அமலாக்கம் உள்ளிட்ட நிலம், பஞ்சமி நிலம், பட்டா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை ஆறுமாத காலத்துக்குள் நடத்திட வேண்டும்.

புதுச்சேரி 

புதுச்சேரி மாநிலத்தில் 1964 ஆம் ஆண்டிற்கு முன்னர் வசித்தவர்கள் அதன் பின்னர் குடியேறியவர்கள் என்று பிரிவினை இல்லாமல் புதுச்சேரியில் வாழ்கின்ற அனைத்து தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு உரிமையை வழங்க வேண்டும்.

துணைத் திட்ட நிதி அமுலாக்க வழிகாட்டுதலில் சொல்லப்பட்ட அடிப்படையில் மாநில, மாவட்ட வளர்ச்சி கவுன்சில் மற்றும் திட்டமிடல், அமலாக்கம், கண்காணித்தல் போன்ற துணை குழுக்களையும் உருவாக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் செல் காவல் பிரிவில்  காலியாக உள்ள அதிகாரிகள் நியமனம் மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.    

புதுச்சேரிக்கு என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தலா ஒரு இடம் தான் உள்ளது. இதுவரை அவற்றில் தலித்துகள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு இல்லாமல் உள்ளது. ஆகவே சுழற்சி முறையில் எஸ். சி /எஸ்.டி கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

துணைதிட்ட நிதி முறையாக முழுமையாக செலவு செய்யப்படாமல் திருப்பப் படுவதும், வேறு பொதுவான திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதும், தலித் மக்களுக்கு சம்பந்தமில்லாத 20 துறைகளின் மூலம் செலவு செய்யப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். துணை திட்ட நிதிக்கு என்று துணை வரவு செலவுத் திட்டம் மாநில பொது வரவு செலவு திட்டத் தோடு இணைக்கப்பட வேண்டும்.

பாகூர் கொம்யூன் பிள்ளையார் குப்பத்தில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள 27 ஏக்கர் நிலத்தில் உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மனை பட்டா வழங்கப்படாததால் ஒரே மனையில் 4, 5 குடும்பங்கள் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அனைவருக்கும் மனைப்பட்டா கிடைக்கவும் தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1970, 1980 களில் வழங்கப்பட்ட வீடுகள் சிதிலம் அடைந்துள்ள நிலையில் அவற்றை இடித்து விட்டு அந்த இடத்தில்  டாக்டர் அம்பேத்கர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மானியத்துடன் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் அறிவித்துள்ள அடிப்படையில் நிலமற்ற தலித்துகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டு உள்ள கையகப்படுத்தபடவேண்டிய 800 ஹெக்டேர் நிலத்தை நிலமற்ற தலித்துகளுக்கு வழங்க வேண்டும்.

கடந்த 2018ம் ஆண்டில் இருளர், வேட்டைக்காரன் ஆகிய இரு பிரிவினர் புதுச்சேரியில் பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு 0. 5 சதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள காட்டுநாயக்கன், ஏருகுலா, காட்டுக்காரன் மற்றும் மலைக்குறவன் ஆகிய நான்கு பிரிவுகள் இணைக்கப்பட்டு ஒரு சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இலவச அரிசி, இலவச வேட்டி சேலை உள்ளிட்ட திட்டங்கள் பணமாக வங்கி கணக்கில் சேர்ப்பதை  நிறுத்தி பொருளாக வழங்கப்பட வேண்டும்.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து விதமான கட்டணங்களையும் இலவசமாக வழங்க ஆவண செய்யும் GO.MS.No.08 / Wel (SCW) / 2020-2021 தேதி 04.02.2021 முழுமையாக அமுல் ஆவதை உறுதிப்படுத்தவேண்டும். இத்திட்டம் குடியேறிய தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட வேண்டும்.       

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 250  இரவு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அரசு அறிவித்த இரவுநேர பாடசாலைகளை துவக்க வேண்டும். 

காலியாக உள்ள 10000கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.அதில் இட ஒதுக்கீடு அமுல் ஆவதை உறுதிப்படுத்த வேண்டும்.

வெளியீடு:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநிலக்குழு
எண்:149, கணேசபுரம், பாலகிருஷ்ணா சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004
அச்சு: புகழ் பிரிண்டர்ஸ், சென்னை – 14

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...