சம்பா சாகுபடிக்குத் தண்ணீர்! மத்திய அரசு தலையிடக் கோரி சிபிஎம் வலியுறுத்தல்!!

காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கான உரிமையைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த 19-09-2012 அன்று புதுடில்லியில் பாரதப்பிரதமரும், காவிரி நதிநீர் ஆணையத் தலைவருமான மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக்கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்ற பிரதமரின் உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டார்.  

கர்நாடக அரசின் இத்தகைய போக்கு தமிழகத்தை வஞ்சிப்பது மட்டுமன்றி கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைப்பதாகும். கர்நாடகத்தில் வறட்சி என்பது உண்மையாகவே இருந்தாலும், தற்போது கர்நாடக அணைகளில் உள்ள 85 டிஎம்சி தண்ணீரில் ஒரு பகுதி தண்ணீரை தமிழகத்துக்கு  உரிய பங்கு தண்ணீரை வழங்க வேண்டியது கட்டாயமானதாகும். இதைத்தான் தமிழக முதல்வரும், பாரதப்பிரதமரும் காவிரி நதிநீர் ஆணையத்தில் வற்புறுத்தினார்கள். இதனை ஏற்க மறுத்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்.  

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மத்திய அரசும், பாரத பிரதமரும் வற்புறுத்தியதற்கு மாறாக கர்நாடக அரசின் நிலைபாட்டை ஆதரித்து பேட்டியளித்துள்ளார். மத்திய அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மேட்டூர் அணை தண்ணீர் வேகமாக குறைந்து வரும் சூழ்நிலையில் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைத்தால் மட்டுமே 14 இலட்சம் ஏக்கரில் உள்ள சாகுபடிகளை காப்பாற்ற இயலும். இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு கர்நாடக அரசினை வற்புறுத்தி வதமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதுடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply