சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவோம் மார்க்சிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிட் கட்சி (மார்க்சிட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 2011ம் ஆண்டு ஏராளமான சவால்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

திமுக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தும் தாராளமய கொள்கையால் உருவான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சாதாரண மக்கள் மீது பல தாக்குதல்களை தொடுத்தது. பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகள் உயர்வு ஏழை, எளிய மக்களை வாட்டி வதைத்ததுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிகக் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.

பல லட்சம் கோடி ரூபாய் பெருமுதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளாக வழங்கி விட்டு சாதாரண மக்களுக்கு வழங்கும் மானியத்தை வெகுவாக வெட்டிச் சுருக்கி விட்டது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவிநியோகத் திட்டத்தில் பயன்பெறும் வகையில்  உணவு உரிமைச் சட்டத்தை நிறைவேற்றாமல் மேம்போக்கான ஒரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தேசம் கண்டிராத 2ஜி அலக்கற்றை ஊழல் உள்பட பல ஊழல்கள் இக்காலத்தில் நடந்துள்ளன.

மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மறுபுறம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் அரசியல் ஆதாயம் தேடுகிறது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மதவெறிக் கலவரங்கள் தூண்டி விடப்படுகின்றன. மக்கள் விரோத மத்திய அரசிற்கு எதிராகவும், வகுப்புவாதத்திற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் மக்கள் கோபாவேசமாக அணி திரண்டு போராடி வருகிறார்கள். விலைவாசி உயர்வு, வாழ்வாதார இழப்புகளுக்கு எதிராக ஏராளமான மக்கள் போராட்டங்கள் இக்காலத்தில் நடந்துள்ளன.  

தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்து ஊழல், நிலமோசடி, குடும்ப ஆதிக்கம், தொழிலாளர் உரிமை மறுப்பு, கிராமப்புற மக்கள் வாழ்வாதார பாதிப்பு போன்றவைகளை எதிர்த்து போராடிய மக்கள்  திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக அரசைத் தேர்வு செய்தனர். ஆட்சி அமைந்ததும் சில மக்கள் நலத் திட்டங்களை அறிவித்த அஇஅதிமுக அரசு தற்போது பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை தாக்கியுள்ளது.  மின் கட்டணத்தை உயர்த்தி அடுத்தக்கட்டத் தாக்குதலை தொடுக்கவுள்ளது. ஜனநாயக உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்களின் துயரங்கள் நீடிக்கின்றன. சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத் திட்டத்தை தொடர வாலிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் போரை நடத்த வேண்டியிருந்தது. பெருகி வரும் வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இளைஞர்களின் போராட்டம் தொடர்கிறது. பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கிறது. காவல்துறையின் அத்துமீறலால் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்துகள் உயிரிழந்தனர்.

லாக்கப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல்பட்டதால் அஇஅதிமுகவின் 7 மாத கால ஆட்சி மக்களிடையை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.   முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. பல இனவெறி தூண்டுதல் சம்பவங்கள் கேரளம், தமிழகத்தில் நிகழ்கின்றன. மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. இலங்கை அரசை நிர்ப்பந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் சாவல்களை எதிர்கொள்ளவும், மக்களின் துயர் துடைக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களோடு இணைந்து போராடும் என உறுதி ஏற்கிறது.   மத்திய – மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும்; வகுப்புவாத, சாதிய, இனவெறி தூண்டுதல் மற்றும் சமூக கொடுமைகளை வீழ்த்தவும்;

மாற்றுக் கொள்கையை முன்னிறுத்தி மதர்சசார்பின்மை, மக்களிடையே நல்லிணக்கம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது. அனைத்துப் பகுதி மக்களுக்கும் புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்களைத் உரித்தாக்குகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply