சாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனசங்க காலம் முதல் முழங்கி வந்துள்ளதமிழகத்தில் சாதிய அணி திரட்டல்கள்நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது கவலையளிக்கிறது. சாதிய அமைப்பு முறையை எதிர்த்து கேள்வி எழுப்பிய சித்தர்கள் காலம் துவங்கி, சமூக சீர்திருத்த முன்னோடிகள், கம்யூனிஸ்ட் இயக்கம், திராவிட இயக்கம் என தொடர்ந்து போராடிய தமிழகத்தில் சாதியஅணிதிரட்டல்களும், சாதிய அமைப்புகளின் செயல்பாடும் அதன் விளைவால் ஏற்படும் சாதிய மோதல்கள், ஆணவப் படுகொலைகள் அனுதினமும் அரங்கேற்றப்படுகின்றன.

அனைத்து சாதிகளையும் சரிக்கட்டும் கழகமாக…

சமீபத்தில் அதிமுக கட்சிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்ட சச்சரவு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்யார் என்ற கேள்விக்கு அவர்கள் சார்ந்த சாதியும், அதன்பெரும்பான்மையும் அளவுகோல்களாக முன்வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. பெரும்பான்மை சாதி, மற்றும் அதன் பின்புலம் என்பதும் தனிநபர்களின் தகுதிகளாக முன்வைக்கப்பட்டது இதுவரை தமிழகத்தில் இல்லாத ஒன்றாகும். ஒருவழியாக ஏற்பட்ட சமரச உடன்பாட்டின் ஓர் அங்கமாக 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியில் நிர்வாகிகள்,குழுக்கள் அமைப்பது இயல்பானதே. அவ்வாறு அமைக்கப்படும் போது அவர்களுடைய பங்களிப்புபோன்றவற்றை கணக்கில் கொண்டு பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வது வழக்கமானதாகும். ஆனால்,அதிமுகவில் தற்போது தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் தகுதி, திறமை அனைத்தும் அவர்கள் சார்ந்த சமூக பின்னணியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் சாதிய பின்புலத்தோடு பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் இடம்பெறாத வேறு சாதிகளைச் சார்ந்த பிரமுகர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் முக்கியப் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ஆக, அஇஅதிமுக என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்பதற்கு மாறாக அனைத்து சாதிகளையும் சரிக்கட்டும் கழகமாக சரிந்துள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் ஆற்றிய சாதனைகளை முன்வைத்து வாக்குகளைப் பெறுவதற்கு வழியில்லாத சூழலில் சாதிய உணர்வுகளை ஊட்டி வாக்குகளைப் பெற முயற்சிக்கப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு ஆளுங்கட்சியே சாதிய உணர்வுகளை ஊட்டி வளர்க்க முயல்வதால் எதிர்கால தமிழகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்தான போக்கு கவலையளிக்கிறது.

சாதிச் சங்க தலைவர்களை வளைக்கும் பாஜக

பாஜகவைப் பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில் தனது வெற்றிக்காக சாதிய அணிதிரட்டலை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் செய்து வருகிறது. உ.பி., தேர்தல் உட்பட ஒவ்வொரு சாதியாக கணக்கெடுத்து அவர்களது வாக்குகளை பெறுவதற்கு அனைத்து தில்லுமுல்லு திருகுதாள வேலைகளையும் செய்துவருகிறது. இதற்காக சாதிக்கலவரங்களை தூண்டிவிடக்கூட அவர்கள் தயங்குவதில்லை. திரிபுராவில் இடதுமுன்னணி ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழங்குடிமக்கள் மற்றும் இதர பகுதி மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து தங்களது குறுகிய வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்தினர்.தமிழகத்தில் பாஜக ஏற்கனவே சாதி அடிப்படையில் தங்களுக்கான ஆதரவு தளத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முந்தைய அகில இந்திய தலைவரான அமித்ஷா பல்வேறு சாதி அமைப்புகளின் மாநாடுகளில் கலந்து கொண்டு தங்களது ஆதரவினைத் தெரிவித்ததன் மூலம் சாதிய அணிதிரட்டலை துவக்கி வைத்தார். சாதிய அமைப்புகளின் சாத்தியமற்ற கோரிக்கைகளைக் கூட தங்களது கட்சி ஆதரிக்கும் என அவர் வாய்ப்பந்தல் போட்டார். உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் பாஜக.ஆனால் அதை மறைத்து பல்வேறு சாதி சங்க தலைவர்களை தங்களுடைய வளையத்திற்குள் அந்தக் கட்சி கொண்டுவர முயல்கிறது.

வட மாவட்டங்களிலுள்ள வன்னிய சமூக மக்களைஅணிதிரட்டுவதற்கான முயற்சியை பாமக முன்னெடுத்துள்ளதோடு, தற்போது அம்மக்களுக்கான தனி இடஒதுக்கீடு என்கிற கோரிக்கையை முன்வைத்து வருகிறது.பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுல வேளாள மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.வட மாவட்டங்களிலுள்ள பட்டியலின மக்களைஅணிதிரட்டும் நோக்கோடு சமீபத்தில் ஆதிதிராவிடராக அணிதிரள்வோம் என்ற முழக்கத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் முன்மொழிந்துள்ளார்.சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ள தலித்மக்கள் அமைப்பாக அணிதிரள்வதில் ஒரு ஜனநாயகஉள்ளடக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பட்டியலின மக்கள் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக அணிதிரள்வது என்பது இயல்பான ஒன்று.தவிர்க்க முடியாதது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையாகும். ஆனால் அதேநேரத்தில் இந்த அணிதிரட்டல் என்பது வாக்குவங்கி அரசியலை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக நீதியை நோக்கிய பயணத்தில்

தமிழகத்தில் நியாயமான இடஒதுக்கீடு போன்றகோரிக்கைகளுக்காகவும், கைரேகைச் சட்டம் போன்ற கொடிய சட்டங்களை எதிர்த்தும், ஆலய நுழைவுக்காகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அணிதிரட்டல் என்பது கடந்த காலங்களில் நடந்துள்ளது. சமூக நீதியை நோக்கிய பயணத்தில் இத்தகைய அணிதிரட்டலை புரிந்துகொள்ள முடியும். ஆனால் தற்போது சில அமைப்புகள் மற்றும் கட்சிகள்சாதிய அணிதிரட்டலை மேற்கொள்வது தங்களதுசொந்த அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல.

ஏற்கனவே, வேறு பல அரசியல் கட்சிகளும் சாதிய பின்புலத்தோடு செயல்பட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் சாதி அடிப்படையில் வாக்காளர்களை பிரிக்கும் போக்கு வலுவடைய வாய்ப்புள்ளது.தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக மக்களைசாதி அடிப்படையில் அணிதிரட்டுவது, சாதிய உணர்வுகளை ஊட்டி வளர்ப்பது தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதோடு எதிர்காலத்தில் பரஸ்பர மோதல் மற்றும் முரண்பாடுகளை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.சாதி, மத அடையாள அரசியல் என்பது ஆளும் வர்க்கத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்குமே உதவியாக இருக்கும். உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை சிதைக்கும் என்பது குறித்து விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

மோடி அரசும் எடப்பாடி அரசும்

மத்திய மோடி அரசும் எடப்பாடி பழனிசாமி அரசும் உலகமயம் தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்க முயன்று வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு அளப்பரிய சலுகைகளை வாரி வழங்குகின்றன. இந்தியாவின் கோயில்கள் எனப்புகழப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குதாரைவார்க்கப்படுகின்றன. 11 விமான நிலையங்கள் இருபெரும் தொழில் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறையை ஏற்கனவே தனியாருக்கு தவணை முறையில் வழங்கியதோடு, தற்போது ரயில்களே விற்கப்படவுள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ், கனிம வளங்கள், நெடுஞ்சாலைகள், கடல் வளங்கள், சுரங்கங்கள் என அனைத்தும் பெரும்தொழில் நிறுவனங்களுக்கு அனுதினமும் வழங்கப்பட்டு வருகின்றன.

மறுபக்கம், நாட்டின் உழைப்பாளி மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், வியாபாரிகள், சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரது வாழ்வும் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிலாளிகள் போராடிப் பெற்ற தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் ஒரே நாளில் பறிக்கப்பட்டுவிட்டன.மொத்த சமூகத்திற்கும் உணவு வழங்கும் உழவர்கள் நெருக்கடி தாங்காமல் தினம்தினம் தற்கொலை செய்துகொண்டு மாண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசு அறிக்கைகளே தெரிவிக்கின்றன. விவசாயம் அழிந்து அதனால் நிலங்களை இழந்து கடன் சுமை தாங்காமல் கிராமப்புற மக்கள் அண்டை மாநிலங்களுக்கு புலம்பெயர்வது அதிகரித்துள்ளது.முற்றிலும் எதிர்பாராத கொரோனா காலத்தில் இந்திய நாட்டு மக்களின் வாழ்வு நொறுங்கிப்போய்விட்டது. உத்தரவாதமான பணியிலிருந்த இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலையை இழந்துவிட்டனர். புலம்பெயர்ந்த அன்றாட உழைப்பாளிகள் வேலையையும், வாழ்வையும் இழந்து சொந்த ஊர்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

பாஜக வலையில் விழும் நிலை…

தமிழகத்திலும் மேற்கண்ட நிலையே நீடித்துக் கொண்டுள்ளது.பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்படுவதால் போராடிப்பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது.ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம்.இதைநோக்கியே மத்திய பாஜக கூட்டணி அரசு நகர்ந்து வருகிறது. ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் குறுகிய நோக்கம் கொண்ட முழக்கங்களுக்காக சாதிய அமைப்புகள் பாஜகவின் வலையில் விழுந்து வருகின்றன.இத்தகைய சாதிய அணிதிரட்டல்கள் தீண்டாமை போன்ற சமூக கொடுமைகளை நியாயப்படுத்தவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு சாதிச்சாயம் பூசவும் பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உடலைக் கூட குடும்பத்தாரிடம் தராமல் தலித் இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட கொடுமையில் கூட குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களது சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு அணிதிரள்வது இதற்கு ஒரு உதாரணமாகும்.

ஹைட்ரோகார்பன் திட்டங்கள், எட்டு வழிச்சாலை, உயர்மின்கோபுரங்கள் போன்றவற்றால் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றிவிடப்படுகிறது.இதற்கான சட்டங்களை மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றியுள்ளன. இதனால் நிலத்தைஇழந்துகொண்டிருப்பது அனைத்துப்பகுதி விவசாயிகளும்தான். விவசாயகூலி வேலையும் சுருங்கி வருவதால்அனைத்துப்பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.சாதியாவது ஏதடா என்று கலகக்குரல் எழுப்பினர் சித்தர்கள். வள்ளலார், வைகுண்டசாமிகள், நாராயணகுரு போன்றவர்கள் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகபோராடினர். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். ‘இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே’ என்று சாடினார் பாவேந்தர் பாரதிதாசன். சாதியக் கொடுமைகளுக்கு எதிராக காலம் காலமாக போராடி வந்துள்ள தமிழக முற்போக்கு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பின்னுக்குத் தள்ளவே தற்போதைய குறுகிய நோக்கம் கொண்ட சாதிய அணிதிரட்டல் அமையும்.

சாதியத்தின் சல்லி வேர்களை கிள்ளி எறிய…

தமிழ் மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகள் சீர்குலைக்கப்பட்டு, இவர்களது சொந்த அடையாளத்தை சாதிய அடையாளமாக மாற்றுவதற்கே இட்டுச் செல்லும்.நிலக்குவியலையும் நிலவுடைமை முறையையும் முற்றாக தகர்க்கும் பொழுதே சாதியத்தின் சல்லிவேர்களையும், கிள்ளி எறிய முடியும். நிலத்திற்கான போராட்டம்என்பது சாதிக்கெதிரான போராட்டத்தின் பிரிக்க முடியாதபகுதி. சாதிமுறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கான போராட்டத்தை சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் அயர்வின்றி நடத்திட வேண்டும்.இந்நிலையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்காக போராடுவதோடு, நிலம், வேலைவாய்ப்பு,சிறு குறு தொழில்கள்,நெசவு போன்றவற்றை பாதுகாப்பதற்கு ஒன்றுபட்டு அனைத்துப்பகுதி மக்களும் போராடுவது அவசியமாகும்.விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற சமூகக் கொடுமைகளுக்கு சாதி மத வித்தியாசம் இல்லை.இதை எதிர்த்து போராட வேண்டிய மக்களை சாதிய அணிதிரட்டலில் தள்ளிவிடுவது ஆளும் வர்க்கத்திற்கே உதவியாக அமையும்.சமூகப்பிணிக்கு சாதிய அணிதிரட்டல் பயன்தராது.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...