சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் மக்களை காக்கவும், அறிவு சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள “வன்னியர் இனமான உரிமைக்காப்பு அறிவுசார் பிரச்சார இயக்கம்” தொடங்கப்படும் என டாக்டர் ச.ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோகனூர் பகுதியில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக அவதூறுகள் அள்ளி வீசப்படுவதால் இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட இரட்டைக் கொலை சம்பவத்திலும், இதற்கு முன் நடைபெற்ற வேறு சில வன்முறைச் சம்பவங்களிலும் உண்மையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுவாக வற்புறுத்தப்பட்டு வந்துள்ளதை அனைவரும் அறிவர். எந்த சம்பவத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த அனைவரையும் குற்றம் சாட்டுகிற போக்கினை யாரும் மேற்கொள்ளவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேற்கண்ட இரட்டை கொலை சம்பவத்தில் கூட ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்கிட வேண்டுமெனவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் பல அரசியல் கட்சிகளும் வற்புறுத்தியுள்ளனவே தவிர, குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது யாரும் பழி சுமத்தவில்லை என்பதே உண்மை.

நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து வருத்தமோ, கண்டனமோ பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவோ, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்த முன்வராதது ஏன் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் விளக்கிட வேண்டும்.

இத்தகைய குறைந்தபட்ச ஜனநாயக மரபினை கூட கடைபிடிக்க மறுத்துவிட்டு எந்த இயக்கமும் சொல்லாத ஒன்றை சொல்லி அதற்காக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாக டாக்டர் ச.ராமதாஸ் அவர்கள் அறிவித்துள்ளது ஆபத்தான உள்நோக்கம் கொண்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இத்தகைய அணுகுமுறை சாதிகளால் வேறுபட்டிருந்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டிய அனைத்து சமுதாய மக்களுக்குள் விரோத, குரோதங்களை உருவாக்குவதற்கு இடமளித்துவிடுமோ என்கிற கவலை ஏற்படுகிறது.

இத்தகைய முயற்சியினை கைவிட வேண்டுமென வற்புறுத்துவதோடு, சாதிய அணிசேர்க்கை சமூக முன்னேற்றத்திற்கு ஒருபோதும் பலனளிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்!

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ...