சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப் பேட்டையில் சங்கர் என்ற 21 வயது வாலிபர் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அஇஅதிமுக அரசு தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறவில்லை என்பதும், சாதிய ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதும் வழக்கமாக மாறியிருக்கிறது. தெரியாமல் கொல்வது என்பதிலிருந்து பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் ஊரே பார்க்க சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை வெட்டிக் கொல்வதும், கொலை ஆயுதங்களோடு தப்பிச் செல்வதும் சாத்தியம் என்கிற அளவிற்கு தமிழகத்தில் சாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. சாதி ஆதிக்க வெறியர்களின் அட்டூழியம், சாதி வெறுப்பு பிரச்சாரங்களை அனுமதிப்பது, ஆணவக் கொலைகாரர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது ஆகியவை எல்லாம் இத்தகைய கொலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக ஆகியிருக்கிறது. சமூக சீர்திருத்த பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவதும் சமீப காலத்தில் அதிகரித்திருப்பதும் தீண்டாமைக்கு எதிராகவும் வெற்று சாதிப் பெருமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலியுறுத்துகிறது. இத்தகைய கொலைகள் சாதி வெறியோடும் ஆணாதிக்கத்தோடும் ஒரு பெண் தான் விரும்பிய ஒருவருடன் வாழும் உரிமையையும் மறுக்கிறது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், சங்கரின் குடும்பத்திற்கும், கவுசல்யாவிற்கும் உரிய பாதுகாப்பும், நிவாரணமும் வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இத்தகைய கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டிய தேவையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் அ. சவுந்தரராசன் இத்தகைய சட்டத்தை இயற்ற வேண்டுமென தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். தமிழக அரசு எவ்வித காரணமும் குறிப்பிடாமல் நிராகரித்து விட்டது. வளர்ந்து வருகிற சாதி ஆணவப் போக்கு குறித்த அரசின் அணுகுமுறையையே இது பிரதிபலிக்கிறது. தமிழகத்தின் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் தீண்டாமைக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...