சாதி ஆணவப் படுகொலை: நீதிமன்றத் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் டிசம்பர் 12-13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கௌசல்யா என்ற சாதி இந்து குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக உடுமலைபேட்டையில் சங்கர் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் விரட்டியடித்து காட்டுமிராண்டித்தனமாக வெட்டி படுகொலை செய்தது. படுகொலை செய்தது வேரு யாருமல்ல கௌசல்யாவின் நெருங்கிய உறவினர்கள்தான். இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் படி கொலைக் குற்றத்திற்காக ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அத்தகைய கொடூரமான செயலில் ஈடுபடுவோர்களுக்கு இத்தீர்ப்பு கடும் எச்சரிக்கையாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

சாதி ஆணவக் கொலைகளை முற்றிலுமாக தடுப்பதற்கு உதவும் வகையில் தனிச் சட்டம் ஒன்றை தாமதமின்றி கொண்டு வருமாறு மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...