“சாதி மறுப்பு தம்பதிகளை நாங்கள் பாதுகாப்போம்” – என்.சங்ரய்யா

 

இடதுசாரி சிந்தனை கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக இருப்பவர், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்ரய்யா.

எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சங்கரய்யாவுக்கு, ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான விருது’ காயிதே மில்லத் அறக்கட்ட ளையால் சமீபத்தில் வழங்கப் பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சங்கரய்யா, விருதுத் தொகையான இரண்டரை லட்சம் ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்காக அப்படியே கொடுத்துவிட்டார். இன்னும் சில மாதங்களில் 95 வயதைத் தொடப்போகிற சங்கரய்யாவை சந்தித்தோம்.

“தமிழ்நாட்டில் எல்லாச் சட்டமன்றத் தேர்தல்களையும் பார்த்தவர் நீங்கள். முந்தைய தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?”

“ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு தன்மைகொண்டது. அது கூடுதல், இது குறைச்சல் என்று எதையும் சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ் என்ற இரண்டு பெரிய அகில இந்திய கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க என்ற இரண்டு பெரிய மாநிலக் கட்சிகள் ஆகியவை இல்லாமல், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இணைந்து மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப் பட்டுள்ளது. இதில் நல்லதொரு திருப்பமாக, தே.மு.தி.க-வுக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.”

“தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆனால், அது வாக்குகளாக மாறுமா?”

“எங்களுக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்றால், நிச்சயமாக அது வாக்குகளாக மாறும். இது, தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும்.”

“ஏராளமான சாதி மறுப்புத் திருமணங்களை நீங்கள் நடத்தி வைத்திருக்கிறீர்கள். இன்றைக்கு, ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறிவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?”

“குறிப்பிட்ட சில சாதிய அமைப்புகள், தலித் மக்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிடுகிறார்கள். ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாரதியின் பாடலை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டால் இத்தகைய நிலைமை வருமா? 21 வயது நிரம்பிய ஆணும், 18 வயது நிரம்பிய பெண்ணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று நம் அரசியல் சட்டம் சொல்கிறது. சட்டத்தை மதிக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை. தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது.

கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் ஆயிரக்கணக்கான கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து உள்ளோம், நடத்தி வருகிறோம். சிங்காரவேலரும், பெரியாரும் பிறந்த மண்ணில், பகுத்தறிவு இயக்கம் தோன்றிய மண்ணில், கௌரவக் கொலைகளுக்கு இடம் கிடையாது. கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.”

“சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் பெரியாரும், கம்யூனிஸ்ட் இயக்கமும் நடத்திய போராட்டங்கள் வீணாகி வருகின்றன என்று நினைக்கிறீர்களா?”

“நிச்சயமாக இல்லை. சரித்திரம் என்றைக்குமே பின்னோக்கிப் போகாது. கௌரவக் கொலைகள் தவறு, சாதி ஒடுக்குமுறை தவறு என்று அனைத்துக் கட்சியினரும், அனைத்துப் பகுதியினரும் ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்யவும், இந்தக் கொடுமைகளைத் தடுக்கவும் முன்வர வேண்டும். தலித் இளைஞனை, தலித் பெண்ணை மணந்தால் நீங்கள் தாழ்ந்துவிடமாட்டீர்கள் என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் போய் அனைவரும் சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள், இத்தகையக் கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவு கொடுத்து, அந்தத் தம்பதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம். அதை உறுதிப்படுத்தத்தான் இதற்கு தனிச்சட்டம் வேண்டும் என்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகளும், பகுத்தறிவு சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.

“ஆனால், பெரிய கட்சிகள் எல்லாம் தீண்டாமை, ஆணவக் கொலைகளைக் கண்டிப்பதற்கு முன்வருவதில்லையே?”

“அந்தக் கட்சிகளில் ஜனநாயக எண்ணமும், தேசபக்த உணர்வும், சாதிக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், இந்தக் கொடுமைகளுக்கு எதிரான இயக்கங்களில் ஒன்றுபட வேண்டும், ஒன்றுபடுவார்கள் என்று நம்புகிறேன். யாரும் இல்லாவிட்டாலும் கூட, சாதிமறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். அந்தத் தம்பதிகளைப் பாதுகாப்போம்.”

நன்றி : Vikatan – ஆ.பழனியப்பன்

Check Also

என் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;

விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...