சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சிவராமகிருஷ்ணன் – விஜயலட்சுமி தம்பதியினரின் உயிருக்கு ஆபத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (22.7.2015) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகல் கீழே;

22.7.2015

பெறுதல்;

       மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,

       தமிழ்நாடு அரசு,

       தலைமைச் செயலகம்,

       சென்னை – 600 009.

பொருள் :     கடலூர் மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சிவராமகிருஷ்ணன் – விஜயலட்சுமி தம்பதியினரின் உயிருக்கு ஆபத்து – உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக…

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த விஜயலட்சுமியும், சிவராமகிருஷ்ணனும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் விரும்பி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். விஜயலட்சுமி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர், சிவராமகிருஷ்ணன் தலித் சமூகத்தைச் சார்ந்தவர். பெற்றோரின் சம்மதம் பெற்றுத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பி அவர்கள் இருவரும் கடந்த 2015 ஜனவரி மாதம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியை நாடினர். ஜனநாயக மாதர் சங்கம் விஜயலட்சுமியின் தந்தை திரு. கோவிந்தராஜ் அவர்களிடம் பேசியும் அவரது சம்மதம் கிடைக்காத நிலையில் இருவரும் 02.02.2015 அன்று சென்னையில் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மே மாதம் விஜயலட்சுமியின் தந்தையும் மற்றும் அவரது மகனும், உறவினர்களும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தியை போனில் தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி கொலை மிரட்டல் செய்து வந்தனர். இது குறித்து டிஜிபி மற்றும் கடலூர் எஸ்.பி.க்கு மனு கொடுத்தும் காவல்துறையினர் மிகவும் தாமதமாக 40 நாட்களுக்குப் பின்பு தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சிவராமகிருஷ்ணனின் உறவினர்களை கடந்த 4 தினங்களாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கொலை மிரட்டல் செய்துள்ளனர். இது குறித்து சிவராமகிருஷ்ணனுடைய தாயார் கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்து பிறகு காவல்துறையினர் அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு கடத்தப்பட்டவரை மீட்டு வந்தனர்.

இதுபோன்றே எங்கள் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட சிலரால் தொடர்ந்து இத்தம்பதியினரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் விஜயலட்சுமியினுடைய பெற்றோர், பாமகவினர் சிலர் மற்றும் சில சமூகவிரோத சக்திகளின் துணைகொண்டு சிவராமகிருஷ்ணனையும் – விஜயலெட்சுமியையும் பிரித்திடவும், அவர்கள் இருவரையும் கொலை செய்யும் நோக்கோடும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கருத வேண்டியுள்ளது.

தமிழகத்தில் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகள் பலர் சாதி வெறி சக்திகளின் மூலம் படுகொலை செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய சாதி வெறி, சமூக விரோத சக்திகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இளம் காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். இப்பின்னணியில் சிவராமகிருஷ்ணன் – விஜயலட்சுமி தம்பதியினர் அமைதியாக வாழ்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், இவர்களை மிரட்டி வரும் சாதி வெறி, சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

 ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

நகல்

உயர்திரு. காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) அவர்கள்,

தமிழ்நாடு காவல்துறை, மயிலாப்பூர், சென்னை.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...