சாத்தூரில் 2 தலித் இளைஞர்கள் காவலர்களால் அடித்து கொலை – பெரும் திரள் இயக்கம் நடத்த திட்டம்

இன்று (27/11/2017) சாத்தூர் ஒன்றியம் நடுச்சூரங்குடிக்கு மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்றோம். திலகராஜ் ஞானசேகரன் என்ற இரண்டு தலித் இளைஞர்கள் இம்மாதம் 20/21 தேதிகளில் வச்சகாரன்பட்டி காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட கோர நிகழ்வு. இரு குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் கூறினோம். கீழ்க்கண்ட கேள்விகள் எழுகின்றன.

  1. மணல் எடுக்க போனபோது மணல் சரிந்து இறந்தார்கள் என்பதுதான் போலீஸ் கிராமத்துக்கு கொடுத்த தகவல். இறந்தவர்கள் பெயரும் ஊரும் போலீசுக்கு எப்படி தெரிந்தது?
  2. தலையாரி விஏஓ யாருக்கும் சொல்லாமல் போலீஸ் அப்புறப்படுத்தியது ஏன்?
  3. மருத்துவ மனையில் பிரேதத்தை பார்த்தபோது ஒரு பொட்டு மணல் கூட இல்லை. மாறாக ரத்த காயங்கள் இருந்தன. புகைப்பட சாட்சியம் உண்டு. திலகராஜின் கழுத்து வளைந்திருந்தது எனவும், ஞானசேகரனின் ஒரு கையும் காலும் ஒடிக்கப்பட்டிருந்தது எனவும் அவரவர் மனைவி உட்பட பார்த்தவர்கள் எங்களிடம் கூறினர்.
  4. மருத்துவ மனையில் இருந்த டிஎஸ்பியிடம் காவலர்கள் மீது சந்தேகம் என புகார் அளித்த உடன், மின்வேலியில் ஷாக் அடித்துதான் இருவரும் இறந்தனர் என போலீஸ் கதையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
  5. மணல் அள்ளிய இடம் சரிந்து மூடும் அளவுக்கு இல்லை, மின்வேலியே கிடையாது, துரு பிடித்த கம்பி, மின் இணைப்பே இல்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.
  6. மின்வேலி அருகில் செத்து கிடந்ததையும் விஏஒ உட்பட யாரும் பார்க்கவில்லை. போலீஸ் சொல்வதுதான்.
  7. 21 இரவு கிராம மக்கள் ஊர் திரும்பிய பிறகு ஆட்டோ அனுப்பி திலகராஜ் மனைவி, உறவினர்களை காவல்நிலையம் வரச்சொல்லி போலீஸ் தயாரித்திருந்த அறிக்கையில் கையெழுத்து கேட்டுள்ளனர். போட மறுக்கவே, ஆட்டோவை திருப்பி அனுப்பிவிட்டு, மனைவி, பெண் உறவினர்களை இரவில் நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர்.
  8. கலெக்டர் ஒரு விசாரணைக்கு ஆர்டிஓ தலைமையில் உத்தரவிட்டுள்ளார்.
  9. போலீஸ் மீது வழக்கு போட்டால் இழப்பீடு கிடைக்காது, மின்வேலி உரிமையாளர் மீது போட்டால்தான் கிடைக்கும் என போலீஸ் தரப்பில் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஏழை உயிருக்கு தலித் உயிருக்கு அரசு எந்திரம் மதிப்பளிப்பதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை உண்மையாக வருமா என சந்தேகம் உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, தீஒமு, விசிக தலையிட்டுள்ளனர்.

கதறி கொண்டிருக்கும் இளம் மனைவிகள், திகைத்து நிற்கும் குழந்தைகளுக்கு என்ன பதிலை சொல்வது? ஒரு குற்றம் இழைத்த சப்இன்ஸ்பெக்டரை பாதுகாக்க அதிகார வர்க்கம் முனையும்போது, சாதி வர்க்கம் இரண்டிலும் அடித்தட்டில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக அதைவிட அதிகம் பேர் வரமாட்டோமா? வருவோம், போராடுவோம், துணை நிற்போம் என சொல்லி வந்துள்ளோம். பெரும் திரள் இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

– உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...