சாமளாபுரம் தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்

மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்

சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவறிழைத்த காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதன்கிழமை தர்மபுரியில் நிறைவடைந்த மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்ட முடிவுப்படி சாமளாபுரம் பகுதிக்குரிய மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

மங்கலம் நால்ரோடு திருப்பூர் சாலையில் இருந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராதிகா, மாவட்டத் தலைவர் ஈ.அங்குலட்சுமி, மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி உள்ளிட்ட பெண்கள் மங்கலம் காவல் நிலையத்தை நோக்கி அணிவகுத்து வந்தனர். அப்போது காவலர்களைக் கண்டித்தும், தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு கொண்டு வரக் கோரியும் முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர்.

மங்கலம் காவல் நிலையம் முன்பாக முற்றுகையிட்ட பெண்கள் காவல் துறையைக் கண்டித்தும், தவறிழைத்த பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆவேசமாக முழக்கமிட்டனர். மங்கலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கவேல், அந்த பெண்களிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக் கூடாது, காவல் நிலையத்திற்கு எதிராக போராடுவது தவறு என்று கூறினார்.

எனினும் அதை மீறி போராட்டம் தொடர்ந்தது. மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராதிகா ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். திரளானோர் பங்கேற்ற மாதர் சங்க காவல் நிலைய முற்றுகை போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...