சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தோழர் கே.வைத்தியநாதன் இன்று பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 98.

வைத்தியநாதன் அவர்களது மறைவு சிஐடியு இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

1925ம் ஆண்டு திருவாரூரில் பிறந்தவர் தோழர் கே. வைத்தியநாதன். திருவாரூர் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்குச் சென்றவர். 1954ம் ஆண்டு புதுவை கம்யூனிஸ்ட் தலைவர் வி.சுப்பையா, தோழர் விபிசி ஆகியோருடன் தோழர் கே.வைத்தியநாதனுக்கு தொடர்பு ஏற்பட்டு, ஒன்றுபட்ட கட்சியில் புதுச்சேரியில் கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து ஊழியரானார். 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற புதுவை பாரதி மில் போராட்டத்தின்போது வைத்தியநாதன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

1968ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் முடிவுப்படி புதுவையில் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். 1978ம் ஆண்டில் சிஐடியு மாநிலக்குழு அலுவலகம் மதுரையிலிருந்து செயல்படத் தொடங்கியபோது அங்கு அலுவலக செயலாளராக பணியாற்றிக் கொண்டே, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை போராட்டம், சிங்கம்புணரி ராயல் எண்பீல்ட் தொழிலாளர் போராட்டம், ரயில்வே போராட்டம், சேலம் மேக்னசைட் தொழிலாளர் போராட்டம், பஞ்சாலை தொழிலாளர் போராட்டம், பீடித்தொழிலாளர் போராட்டம் இப்படி எண்ணற்ற பல்வேறு போராட்டங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கியதுடன் போராட்டங்களுக்கும் தலைமையேற்று நடத்தியவர்.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கம், டான்சி தொழிலாளர்கள் சங்கம் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு தோழர் வைத்தியநாதனின் பங்கு மகத்தானது.

சர்க்கரை, பஞ்சாலை, பீடி போன்ற தொழிலாளர் சம்மேளனங்களின் நிர்வாகியாக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். சிஐடியுவில் மாநில நிர்வாகியாகவும், அகில இந்திய நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு. சிகிச்சை பெற்று சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்திலேயே தங்கியிருந்து சங்கங்களுக்கு வழிகாட்டும் பணியை செய்து வந்தார்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தொழில்களில் சங்கம் வைத்து அந்தத் தொழிலாளிகளோடு நெருக்கமாகப் பழகி, தொழிற்சங்க இயக்கத்தை குறிப்பாக சிஐடியுவை வளர்த்த பெருமை தோழர் கே. வைத்தியநாதனைச் சாரும். மிகவும் எளிமையானவர். கைது, சிறை என பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். திருமணம் செய்து கொள்ளாமல் இயக்கத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது மறைவால் துயருற்றிருக்கும் தோழர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...