சிஐடியு தலைவர்கள் கைது! மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!!

சங்கம் சேரும் உரிமை, கூட்டுப்பேர உரிமை உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தொழிற்சங்க அங்கீகார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10,000/- வழங்குவது, நிரந்தரத்தன்மையுள்ள பணிகளில் உள்ள காண்டிராக்ட் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது, சமவேலைக்கு சமஊதியம், நலவாரியங்களின் செயல்பாட்டில் முன்னேற்றம் காண்பது, சங்கம் அமைத்ததற்காக பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16,17,18 தேதிகளில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபயணமாக சென்று அரசிடம் கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) இன்று காலை தொடங்கியுள்ளது.

சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், எம்.எல்.ஏ., தலைமையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து தொடங்கிய நடைபயணத்தை வழிமறித்து தொடக்க இடத்திலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லி, காவல்துறையினர் அனைவரையும் கைது செய்துள்ளனர்.

தமிழக காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.  தொழிலாளர்களின் கோரிக்கைகளை நடைபயணமாகச் சென்று  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தமிழக அரசு சகித்துக் கொள்ளவில்லை என்பதையே  காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, மிக மோசமான அடக்குமுறை போக்காகும். உரிமைக்கான போராட்டங்களையும், ஜனநாயக இயக்கங்களையும் காவல்துறையை கொண்டு ஒடுக்க முனையும் ஜனநாயக விரோத நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத்தலைவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply