சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஐ(எம்) கடிதம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் இன்று (24.2.2015) மாநில காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) அவர்களை நேரில் சந்தித்து “இராமநாதபுரம் மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள். கலையரசன், எம். சிவாஜி ஆகியோருக்கு, சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி” கடிதம் அளித்துள்ளனர். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது.


24-2-2015

பெறுநர்

மாநில காவல்துறை இயக்குநர் அவர்கள்,

தமிழக அரசு,

சென்னை.

மதிப்புக்குரிய திரு.அசோக் குமார் அவர்களுக்கு,

வணக்கம்.

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்டக் குழுவின் செயலாளருமான எம்.சிவாஜி அவர்களுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளார். அவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே போல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கலையரசன் அவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பிலும், தொழிற்சங்க சார்பிலும் நடந்த இரண்டு கூட்டங்களில் சிவாஜி பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்னையைத் தூண்டி விடும் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவே தான் கலையரசனுக்கான கடிதத்தின் உள்ளடக்கமும். மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாத போதும், அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்காத போதும், அல்லது தவறாக நடக்கும் போதும் தட்டிக் கேட்பது எல்லா குடிமக்களுக்கும் உள்ள உரிமை. அரசு குறித்தோ, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் குறித்தோ விமர்சிப்பதே அவதூறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதப் பட்டு விளக்கம் கேட்பது என்று ஆரம்பித்தால், அது கருத்து சுதந்திரமும், அரசியல் கட்சிகளின் செயல்பாடும், தொழிற்சங்க அமைப்புகளின் நடவடிக்கையும் முடக்கப் படுவதற்கான முகாந்திரமாகவே அமையும் என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

எங்கள் அமைப்பு பேசுவது பொதுமக்களிடையே அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர் எழுதியிருக்கிறார். உண்மையில் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட பிரச்னைகளில் அரசின் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் அவர்கள் நடவடிக்கை காரணமாக நம்பிக்கையின்மை ஏற்படும் பின்னணியில் தான் நாங்கள் பேசுகிறோம். பிரச்னையைத் தலைகீழாகப் பார்ப்பது பலனளிக்காது.

இந்தியா ஜனநாயகக் குடியரசு என்பதை சிக்கல் காவல்நிலைய ஆய்வாளருக்கு உணர்த்த வேண்டுகிறோம். ஜனநாயகத்திலிருந்து பிரிக்க முடியாதது விமர்சிக்கும் உரிமை. அச்சுறுத்தல் மூலம் அதைத் தடுக்க நினைப்பது ஜனநாயகத்தையே மறுப்பதாகும் என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

தங்களன்புள்ள,

/ஒப்பம்/

(ஜி.ராமகிருஷ்ணன்)

செயலாளர்

Check Also

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்

டெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் ...