சிபிஐ(எம்) இன் பொங்கல் வாழ்த்து

தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரது குடும்பத்திலும் இன்பம்  பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்று வேளாண் தொழிலை சிறப்பித்துப் பேசினார் திருவள்ளுவர். உலகம் முழுவதும் அறுவடையின் துவக்கம் விழாவாக பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அறுவடையின் துவக்கத்தை பொங்கல் திருநாளாக தை முதல் நாளை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் திருநாள் என்பது மானுடத்திற்கும், இயற்கைக்கும் இருக்கும் ஆனந்தமான உறவை சிறப்பிக்கும் திருநாளாக அமைந்துள்ளது. பழைய துன்பங்கள் தொலைந்து புதிய இன்பங்கள் வந்து சேரட்டும் என்ற தளராத நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த விழா அமைந்துள்ளது.

உலகின் ஆதி தொழில்களில் ஒன்று உழவு. ஆனால் இன்றைக்கு தாராளமயமாக்கல் யுகத்தில் உழவுத்தொழிலின் நிலையும் அதை கைக்கொள்ளும் உழவர்களின் நிலையும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுத்தேவையை உவப்போடு நிறைவேற்றும் உழவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்தபடி உள்ளது. விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியது நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்தது. அவரது நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை விளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு அவற்றையெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு மாற்றித்தர வேண்டும் என்பதுதான். மெய்யான நிலச்சீர்திருத்தம், வேளாண் பொருட்களுக்கு கட்டுபடியான விலை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின்  மானியத்தை உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாக்க முடியும். நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.

ஆனால் இன்றைக்கு தேசிய நீர்க்கொள்கை என்ற பெயரில் நீர்வளத்தையே பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறது. நீர் உள்ளிட்ட இயற்கையின் சீதனம் அனைத்தையும் பொதுவில் வைப்பதற்கான போரைத் தொடர்ந்திட வேண்டியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மழை மற்றும் ஆற்றுப்பாசனத்தை நம்பி பயிர் செய்த விவசாயிகள் கை முதலையும் இழந்து தவிக்கின்றனர். வறட்சி குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும். மத்திய அரசும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் கட்டுபடியான விலை கிடைக்கவும் பயிர் இன்சூரன் பாதுகாப்புத் திட்டம் குறைபாடின்றி நிறைவேறவும் அரசுகளை வலியுறுத்த வேண்டியுள்ளது.

அனைத்துப் பகுதி மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்துகிறபோது, பெரும்பகுதி மக்களை பலன் பெறுவதிலிருந்து தடுக்கும் குறைபாடு உள்ளதான ஒரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உணவுப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தைத் தொடர வேண்டியுள்ளது.  பொது விநியோக முறையை பாதுகாப்பது இதன் ஒரு பகுதியாகும். காடு திருத்தி கழனியும், ஊரும் செய்ததெல்லாம் உழைக்கும் மக்களே. ஆனால் பெரும் பகுதி உழைக்கும் மக்களை சாதியின் பெயரால்  ஒதுக்கி வைத்தது நிலவுடைமைச் சமூகம். அந்தக்கொடுமை இன்னமும் தொடர்கிறது. தமிழகத்தில் இன்னமும் கூட பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை தொடர்கிறது. அனைத்துவித ஒடுக்குமுறைகளையும் முறியடித்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பதுதான் ஆதித்தமிழ்ச் சமுகத்தின் அகவாழ்க்கையாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு சாதியின் பெயரால் காதலைப் பிரிப்பதும், கவுரவக்கொலை செய்வதும் நிகழ்கால சமூகத்திற்கு பெரும் களங்கமாக உள்ளது. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் தொடர்ந்து சமூக ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். காதலை, கவுரவப்படுத்துகிற, பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் சம உரிமை தருகிற சமூகம் சமைத்திட தொடர்ந்து போராடுவோம்.

அரிசி, வெல்லம், நெய், பருப்பு என பல்வேறு பொருட்களின் சேர்க்கையில்தான் சுவையான பொங்கல் உருவாகிறது. கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை என பல்வகை விளைபொருட்கள் வீட்டுக்கு வந்து உழவுத்திருநாளுக்கு பெருமை சேர்க்கிறது. அதேபோன்று பல மொழி பேசுகிற, பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு மதங்களைப் பின்பற்றுகிற பன்முக நாடாக இந்தியா விளங்குவதுதான் பெரும் சிறப்பாகும். ஆனால் இந்த ஒற்றுமையைச் சீர்குலைத்து ஒற்றைப்பண்பாட்டைத் திணிக்க முயலும் மதவெறி சக்திகள் அதிகாரத்தைப் பிடிக்க அலைவதைப் பார்க்கிறோம். இதை முறியடித்து இந்தியாவில் பன்முக பண்பாட்டை, மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது. தாராளமயமாக்கல் கொள்கையால் நாடு பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறது. இந்தக்கொள்கைதான் இந்திய விவசாயத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. தேசத்தின் இறையாண்மையை, ஒற்றுமையைப் பாதுகாத்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்த இனிய நாளில் சபதமேற்போம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
 

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply