சிபிஐ(எம்) இன் மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (17.09.2013)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (17.09.2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின்  மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1)    சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:
சென்னை உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீபத்தில் தான் சுமார் 2400 கோடி ரூபாய் செலவு செய்து, சென்னை விமான நிலையத்தினை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நவீனப்படுத்தியது. அதே அளவிற்கு செலவு செய்து கொல்கத்தா விமான நிலையமும் நவீனப்படுத்தப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் விமான நிலையப் பராமரிப்பு நிர்வாகத்தை ஒப்படைப்பது பெரும் மோசடியாகும். 2006ம் ஆண்டு டெல்லி, மும்பை விமான நிலையங்களை தனியார் மயமாக்கியதை கண்டித்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் புதிதாக எந்த விமான நிலையத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். அந்த வாக்குறுதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மற்ற பல பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்தது போன்றே, அரசுக்கு பெரும் இலாபத்தை ஈட்டித்தருகிற சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார் கொள்ளைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

தனியாரிடம் விமான நிலையப் பராமரிப்பு நிர்வாகத்தை ஒப்படைக்கிற போது, அதிக விலை மதிப்புள்ள நிலங்கள், கருவிகள், சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கே மத்திய அரசு வாரி வழங்கி விடும். இதுதான் தில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி விமான நிலையங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்ட போது நடந்தது. அதே கதிதான், சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களுக்கும் ஏற்படும்.

கடந்த ஆண்டு மத்திய கணக்குத்தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படும் வகையில் டெல்லி விமான நிலைய இயக்கத்தையும், நிலங்களையும் தனியாரிடம் ஒப்படைத்தது குறித்து மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார். எனவே, சென்னை உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும், மீண்டும் இந்திய விமான நிலையங்கள் ஆணையமே விமான நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனையின் முக்கியம் கருதி, தமிழக அரசு உள்ளிட்ட  தொடர்புடைய ஆறு மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

2)    100 நாள் வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ. 148 ஐ வழங்கிடுக!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும், வறுமையிலிருந்து ஓரளவு அம்மக்கள் மீளவும், குடிபெயர்தலை குறைக்கவும் உதவியுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் நீடிக்கின்றன. இதற்கெதிராக மக்கள் தன்னெழுச்சியாகவும், விவசாயத் தொழிலாளர் அமைப்பின் சார்பிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டக்கூலி ரூ.148/- எங்கும் வழங்கப்படவில்லை. தீர்மானிக்கப்பட்டுள்ள வேலை அளவு 42 கன அடி என்பது தொழிலாளர்களால் செய்ய இயலாததாக உள்ளது. சட்டப்படி ஆண்டுக்கு 100 நாள் வேலையும் பெரும்பாலான ஊராட்சிகளில் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

எனவே, தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக சட்டக்கூலி ரூ,148/- அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைத்திடவும், 100 நாள் வேலை வழங்குவதை உத்தரவாதப்படுத்திடவும் வேண்டும், வேலை அளவை மாற்றி அமைப்பது குறித்து விவசாயத் தொழிலாளர் அமைப்புகளுடன் விவாதித்து அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள ...

Leave a Reply