சிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் மீது பட்டப்பகலில் உள்ளூர் எதிரிகளுடன் சேர்ந்து கூலிப்படையினரால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு கொலை செய்ய முயற்சித்த சமூக விரோதிகளையும், திட்டமிட்டு துணைபோனவர்களையும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை வட்டம் ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.வேல்முருகன். சிபிஎம் ஊழியர். கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காகவும், ஆதிக்க சக்திகளை எதிர்த்தும் செயல்பட்டு வருகிறது. வேல்முருகன் விதொச திருநாவலூர் கிழக்கு ஒன்றியப் பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார். கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் ஆத்திரமுற்ற ஆதிக்க சக்திகளும், கட்சியின் எதிரிகளும் தொடர்ச்சியாக வேல்முருகனை அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் சம்பவத்தன்று (பிப்.14) பகலில் கொட்டாரக் குப்பத்தில் உள்ள தனது மகனின் பூக்கடையிலிருந்து தனது வீட்டிற்கு தனியே இருசக்கர வாகனத்தில் வந்த ஏ.கே.வேல்முருகனை பின் தொடர்ந்து வந்த எதிரிகள் டாடா ஏசி பிக்கப் வண்டியை குறுக்கே நிறுத்தி வேல்முருகனை மடக்கியுள்ளனர். தன்னை தாக்க வருகிறார்கள் என வேல்முருகன் தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கே ஏற்கனவே திட்டமிட்டு பதுங்கியிருந்த மேலும் சில எதிரிகள் வேல்முருகனை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அவர் சுயநினைவிழந்து நிலைகுலைந்த பின் அவரைத் தூக்கி முட்புதரில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் சென்றபின் அவ்வழியே சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வேல்முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு வேல்முருகனை அனுப்பியுள்ளனர்.

சமூகவிரோதிகள் வேல்முருகனை திட்டமிட்டு கொலை வெறியோடு தாக்கியதில் தலை மற்றும் முகத்தில் கொடும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு கால்களும், கை எலும்பும் முறிந்துள்ளது. ஆரிநத்தம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் எதிரிகளின் ஏற்பாட்டில் வெளியூரிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுதான் இக்கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆகவே இத்தாக்குதலுக்கு பின்னால் பெரும் சதிச்செயல் இருப்பதாக தெரிகிறது. முன்னதாக தகவலறிந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களுடன் பேசி உரிய சிகிச்சையளிக்க கேட்டுக் கொண்டனர்.

எதிரிகளின் இக்கோழைத்தனமான தாக்குதலை சிபிஎம் மாவட்டக்குழு சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு இக்கொலை வெறித் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திட வேண்டும். தோழர் ஏ.கே.வேல்முருகனுக்கு உரிய உயர் மருத்துவ சிகிச்சையளிக்கவும், அவர் குடும்பத்தினருக்கு பாதுகாப்பளிக்கவும் வலியுறுத்துகிறோம் என கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...