சிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாச் செயலாளராக தோழர் கே.பி. கனகவேல் பணியாற்றி வருகிறார். 21.02.2021 அன்று பணி நிமித்தமாக வெளியே சென்ற இவரை ரவுடிக் கும்பல் ஒன்று பின்தொடர்ந்து சென்று உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களால் கொலை செய்யும் நோக்கோடு சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்ததால் ரவுடிக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. தலையின் முன் பகுதி, கழுத்து, இடுப்பின் இடது பகுதி, வலது கணுக்கால் ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடி படுகாயமடைந்த நிலையில் கிடந்த கனகவேலை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தோழர் கே.பி. கனகவேலும், இவரது மனைவி வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் தோழர் கே. சண்முகவள்ளியும் ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களில் முன்னிலை வகிப்பவர்கள். உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் முறைகேடுகள், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற பணிகள் ஆகியவை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக தொடர்ந்து போராடி வருபவர் தோழர் கே.பி. கனகவேல். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நபர்கள் இவர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலை வெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தோழர் கே.பி. கனகவேல் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அடையாளங் கண்டு கைது செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...