சிபிஐ(எம்) சட்டமன்றக் கொறடா கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வேளாண்துறை அமைச்சருக்கு கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் அவர்கள் “2013-14 பயிர் கப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிடுவது – கடந்த ஆண்டை போல் வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் MNIASக்கு பதிலாக NIAS (தேசிய பயிர்காப்பீடு திட்டத்தை) அமலாக்கிட கோருவது தொடர்பாக” மாண்புமிகு. வேளாண்துறை அமைச்சர் 04.04.2015 அன்று அனுப்பியுள்ள கடிதம்.


04.04.2015

பெறுநர்

            மாண்புமிகு. வேளாண்துறை அமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

மாண்புமிகு. அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-        2013-14 பயிர் கப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிடுவது – கடந்த ஆண்டை போல் வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் MNIASக்கு பதிலாக NIAS (தேசிய பயிர்காப்பீடு திட்டத்தை) அமலாக்கிட கோருவது தொடர்பாக:     

            தமிழ்நாட்டில் கடந்த 2013-14ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய இழப்புக்கு ரூ. 444 கோடி பயிர்க்காப்பீடு தொகை வழங்கிட தேசிய பயிர் காப்பீட்டு கழகம் மதிப்பீடு தயார் செய்தது. இத்தொகையினை மத்திய அரசு ரூ. 196 கோடியும், மாநில அரசு 196 கோடியும் மீதம் காப்பீட்டு கழகம் வழங்கிட வேண்டும். இவ்வாறு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இப்போது வரை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிடவில்லை. வறட்சியினால் அதிக பாதிப்புக்குள்ளனா இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 224 கோடி பயிர்காப்பீட்டு தொகை வழங்கிட வேண்டியுள்ளது.

            எனவே தமிழக அரசு அவசரமாக தலையிட்டு மேற்கண்ட ரூ. 444 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

            மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் தேசிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு (NIAS) மாறாக மேம்படுத்தப்பட்ட தேசிய காப்பீட்டு திட்டத்தை (MNIAS) செயல்படுத்த வேண்டுமென மாநிலங்களை கட்டாயப்படுத்தியது. ஆனால் இந்த புதிய திட்டமானது விவசாயிகளுக்கு பலனளிக்காது என்பதோடு கூடுதலான பிரிமியம் தொகை செலுத்த வேண்டியதால் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பை கணக்கில் கொண்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டில் பழைய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டுமென கோரியது. மத்திய அரசும் இதை ஏற்றுக் கொண்டு 2014-15 ஒரு ஆண்டிற்கு மட்டும் பழைய திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. அதனடிப்படையில் கடந்தாண்டு பழைய திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் நடப்பு (2015-16) ஆண்டு முதல் மீண்டும் புதிய மேம்படுத்தப்பட்ட தேசிய வேளாண் திட்டம் செயல்படுத்த வேண்டிய நிலைமை உள்ளது. இத்திட்டத்தினால் விவசாயிகளுக்கு காப்பீட்டு பலன் கிடைக்காது என்பதுடன் பல மடங்கு அதிகமான பிரிமீயம் தொகை கட்ட வேண்டியுள்ளதால் அதிகமான விவசாயிகள் காப்பீடு திட்டத்திலிருந்து விலகி விடும் நிலைமை ஏற்படும்.

எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அமலில் இருந்த “தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தை (NIAS)யே தொடர்ந்து செயல்படுத்திட – மத்திய அரசை வற்புறுத்தி ஏற்க வைப்பதற்கான உடனடி நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன.

நன்றி.

தங்களன்புள்ள,

/ஒப்பம்/

(கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,)

சிதம்பரம் தொகுதி

Check Also

அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக ...