சிபிஐ(எம்) சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி மீது காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் மு.கந்தசாமி மீது திருப்புவனம் காவல்துறையினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

செவ்வாயன்று (16.01.2018) மாலை திருப்புவனம் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள் சங்கர், நந்தகுமார், ராஜா ஆகியோர் திருப்புவனம் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அப்பாவி பெண்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் காய்கறி கூடைகளை எட்டி உதைத்து சாலையில் வீசியுள்ளனர், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தனது மனைவியுடன் காய்கறி வாங்க வந்த தோழர் மு. கந்தசாமி இதை பார்த்து காவல்துறையினரிடம் “ஏழை, எளிய மக்களிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்” என்று நியாயம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள் “இதைக்கேட்க நீ யார்” என்று அவரை தாக்க முயன்றுள்ளனர். தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று கூறியும் அவரை மிக இழிவாக திட்டி, கன்னத்தில் அறைந்ததோடு, கைகளை பின்புறமாகக் கட்டி ஆட்டோவில் தூக்கிப்போட்டு காவல்நிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

காவல்நிலையத்தில் கழிவறை அருகே அவரை நிறுத்தி ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி, லத்தி கம்புகளால் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த தோழர் மு.கந்தசாமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த பின்னணியில், திட்டமிட்டு இந்த தாக்குதல் நடந்துள்ளது.  மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்துள்ள காவல்துறை துணை ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள் சங்கர், நந்தகுமார், ராஜா ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

திருபுவனம் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன குரல் எழுப்புமாறு கட்சி அணிகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன இயக்கம் நடைபெறவுள்ளது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...