தியாகி ராமநாதன் நினைவுக் கொடிக்கம்பத்தை எம்.என்.எஸ். வெங்கட்டராமன் பெற்றுக்கொண்டார். அருகில் க.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்களும், பிரதிநிதிகளும்.

சிபிஐ(எம்) சிவகங்கை மாவட்டக்குழு மாநாடு துவக்கம்!

சிவகங்கை, டிச. 17 –

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட 21-வது மாநாடு காரைக்குடியில் புதனன்று தொடங்கியது. மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் சி. சுப்பிரமணி ஏற்றினார். முன்னதாக சிவகங்கை மாவட்டம் நயினாங்குளத்திலிருந்து தோழர்கள் அ.சண்முகம், அ.ஆறுமுகம் நினைவாக கொண்டுவரப்பட்ட செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பெற்றுக் கொண்டார்.கண்டர மாணிக்கத்திலிருந்து தியாகி ராமனாதன் நினைவாக கொண்டுவரப்பட்ட கொடிக்கம்பத்தை மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் பெற்றுக்கொண்டார்.

மானா மதுரையிலிருந்து தோழர் முருகன் நினைவாக கொண்டுவரப்பட்ட ஜோதியைமணி பெற்றுக் கொண்டார். கண்டர மாணிக்கத்திலிருந்து தியாகிகள் கிருஷ்ணன், தக்கான் ஆகியோர் நினைவாக கொண்டுவரப்பட்ட ஜோதியை பழ.ஆறுமுகம், மு.சோமசுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வேணுகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தி, ஜீவசிந்தன் மாநாட்டு தலைமைக்குழுவாக இருந்து மாநாட்டை வழிநடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துராமலிங்கபூபதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர்எம்.காசிநாதன் வரவேற்றுப்பேசினார்.

மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முதலாளித்துவத்தை பாதுகாக்க மக்கள் மீது சுமைகளை ஏற்றுகிறார்கள். முதலாளித்துவ நெருக்கடியை மீட்டெடுப்பதற்கு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு ஆளும் வர்க்க அரசுகள் உதவுகின்றன.சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை குறைக்கிறார்கள். கல்வி, மருத்துவம் ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்கிறார்கள். முதலாளித்துவத்தின் நெருக்கடியை சமாளிக்க, ஏழை, எளிய மக்கள் மீது வரிகளை போட்டு, கட்டணத்தை உயர்த்தி சிலுவையை சுமக்க வைக்கிறார்கள்.

முதலாளித்துவம் உற்பத்தி செய்கிற பொருட்களை வாங்குகிற சக்திமக்களிடம் ஏற்படவில்லையென்றால் மீண்டும் முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதே உண்மையாகும். காலையில் செய்தித்தாளை பார்க்கும்போது மனம் பதைத்தது. பாகிஸ்தானில் 160 குழந்தைகளை தலிபான்கள் சுட்டுக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. இந்ததலிபான்களை உருவாக்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம். பொதுத்துறையின் லாபம் மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை அளிக்கிறது. ஆனால் தனியார் முதலாளிகளின் லாபம் அவர்களின் சொந்த வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

வலுத்தவன் வாழட்டும் என்கிற கொள்கையை பாஜக அரசு பின்பற்றுகிறது. மோடியின் ஆட்சியில் பெருமுதலாளிகளுக்கு சலுகை அதிகரிக்கிறது; சாமானிய மக்களுக்கான சமூக நலத்திட்டங்களின் நிதி குறைக்கப்படுகிறது. தமிழகத்தில் அம்மா சிமெண்ட் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது அறிவிப்போடு நின்றுவிட்டது. இதேபோல மணல் திட்டம் தொடங்கினால் நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே. மாணிக்கம் வேலை அறிக்கையையும், நிதிக்குழு கன்வீனர் ஏ.ஆர். மோகன் வரவு -செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டையொட்டி செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. மாநாடு வியாழனன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...