சிபிஐ(எம்) செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (15.7.15)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 14-15 ஆகிய தினங்களில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:


சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சமூக சீர்திருத்த இயக்கங்களின் வலுவான தளமாக விளங்கிய தமிழகத்தில் சமீப காலமாக சாதி துவேஷங்களும், வன்மங்களும் அதனடிப்படையிலான இயக்கங்களும் பெருகி வருவது கவலையளிக்கிறது. பொதுவெளியில் சாதி பெருமையை பறைசாற்றுகிற, பிற சாதிகளை இழிவுபடுத்துகிற நடவடிக்கைகள் கூச்சநாச்சமின்றி செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சமீப காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாதி அடக்குமுறைகளும், சாதி வன்மக்கொலைகளும் பெருகி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்குள் சுமார் 60 கௌரவக் கொலைகள் எனப்படும் சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் தமிழகத்தில் சாதிவெறிக்கு எதிராகவும், அனைத்து சாதியினரையும் சமமாக கருதும் மனப்பாங்கை உருவாக்கவும் அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.

இத்தகையப் பிரச்சாரங்களை அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் வலுவாக முன்னெடுத்துச் செல்வதோடு சட்டரீதியான பாதுகாப்புகளும், நடவடிக்கைகளும் தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையிலேயே கௌரவக் கொலைகள் எனப்படும் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு ‘தனிச்சட்டம்’ இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அதே போல 1998ம் ஆண்டு தென்மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மோகன் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கையின் முற்போக்கான பல அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

குறிப்பாக சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையளிக்கும் வகையில் அவர்களை ஒரு சிறப்பு பிரிவினராக கருத வேண்டுமென்று நீதிபதி மோகன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

நீதிபதி மோகன் கமிசன் பரிந்துரையின் சம்பந்தப்பட்ட பகுதி


போரூர் ஏரியை பாதுகாத்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் நீராதார அமைப்புகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் சிறிது, சிறிதாக கைவிடப்பட்டதன் விளைவு தமிழகம் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தினந்தோறும் திண்டாடும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவைக்கு பல்வேறு ஆதாரங்களை நம்பியும் அவற்றில் ஏதாவது ஒன்றை கைவிடும்பட்சத்தில் நெருக்கடியை சந்திக்கும் நிலைமையும் உள்ளது. இந்நிலையில் சென்னை குறிப்பாக போரூர் பகுதிக்கு குடிநீர் ஆதார தளமாக விளங்கும் போரூர் ஏரியை பரப்பளவை குறைப்பதற்கும் அதன் மூலமாக அதன் பயன்பாட்டை சுருக்குவதற்குமான பணிகள் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டியிருப்பது நியாயமற்ற நடவடிக்கை.

எனவே ஏரியை சுருக்குவதற்கு வழிவகுக்கும் நடவடிக்கையை பொதுப்பணித்துறை உடனடியாக கைவிட வேண்டும். தற்போதுள்ள ஏரியின் ஏதாவது ஒரு பகுதி தனியாருக்கு சொந்தமாக இருப்பின் அதை எப்படி அரசுக்கு சட்டப்படி சொந்தமான நிலமாக மாற்றுவது என்பதை அரசு சிந்திக்க வேண்டுமே தவிர ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் அதுவும் குடிநீர் பயன்பாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஒரு ஏரியை தனியாருக்குச் சொந்தமானது என்று சொல்வது பொருத்தமற்ற வாதம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பல லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் தேவையை விட ஏதேனும் ஒரு தனி நிறுவனத்தின் உரிமை முக்கியமானது என்று பொதுப்பணித்துறை கருதுவது கண்டனத்திற்குரியது.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏரியை சிறிதாக்கும் பொதுப்பணித்துறையின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், தற்போது ஏரி உள்ள பகுதி முழுவதையும் அரசும், சட்டப்படியான உரிமையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...