சிபிஐ(எம்) செயற்குழு‍ தீர்மானம் (3.1.14)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (ஜனவரி 03, 2014) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் சிஐடியுவின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான காலி கோஷ் ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

மத்திய அரசு 9 சிலிண்டருக்கு மேல் வாங்குவோருக்கு சமையல் எரிவாயு விலையை ரூ.220/- உயர்த்தியிருக்கிறது. இதைப்போன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை முறையே லிட்டருக்கு 75 பைசா, 50 பைசா என உயர்த்தியுள்ளது. உணவுப் பொருட்களின் விலையும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த விலை உயர்வு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல கூடுதல் துயரங்களை அனைத்துப் பகுதி மக்களின் மீதும் சுமத்தியிருக்கிறது.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதை ஒரு தவம் போல அவக்கேடான முறையில் மத்திய அரசு உயர்த்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாப அதிகரிப்புக்காக ஏழை, எளிய, நடுத்தர மக்களை தொடர்ச்சியாக கசக்கிப் பிழிவதை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிக்க மகிழ்ச்சியோடு செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மத்திய-மாநில அரசுகளுக்கு வரிகளாக ரூ.1.5 லட்சம் கோடி வாரி வழங்கிய பிறகும் கூட 7845 கோடி ரூபாய் கடந்த ஆண்டில் லாபம் ஈட்டியுள்ளன. இந்தப் பின்னணியில் விலை உயர்வுகள் நியாயப்படுத்த முடியாததாகும்.

பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பதவிக் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாக, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை விட அந்நிய நிறுவனங்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உறுதிபூண்டுள்ளதை அவர் மீண்டும் ஒரு முறை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடியாக இந்த விலை உயர்வுகளை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த விலை உயர்வுக்கு எதிராகவும் அதன் மூலாதாரமான நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் குரலெழுப்ப வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply