சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானம் (18.11.2013)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நவம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு :-

தீர்மானம்: 1

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதை மத்திய அரசு நிறுத்தி வைக்க வலியுறுத்தி- மேற்கு தொடர்ச்சி மலையை மிக முக்கியமான உயிர்ச்சூழல் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்ற சுற்று புறச்சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில் மற்றும் திட்டக்குழு உறுப்பினர் கே.கஸ்துரி ரங்கன் ஆகியோரது சிபாரிசுகளை ஏற்று மத்திய அரசு 37 சதவிகிதமான பகுதியினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க  முனைந்துள்ளது. இந்த முடிவினை மேற்கொள்வதற்கு முன்பு இப்பகுதி சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துக்களை மத்திய அரசு உரிய முறையில் பரீசிலிக்கவில்லை. இவ்வாறு அறிவிப்பதன் மூலம் இத்துடன் தங்களது  வாழ்வாதாரத்தை இழந்து விடுவோமோ என்ற பதற்றத்தில் அங்கு வாழும் மக்கள் தவிக்கின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு சார்ந்துள்ள அடிப்படை வளர்ச்சித் திட்டங்களுக்கும் தடைவிதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்களுக்கு நிலப் பட்டா வழங்குவது, போக்குவரத்து, சாலை செப்பனிடுவது, பள்ளிகள் மற்றும் மருத்துவமனை மற்றும் மேம்பாட்டு பணிகள் கேள்விக்குறியாக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதுமட்டுமின்றி இப்பகுதியில் விளைச்சலை அதிகரிக்க ரசாயன உர பயன்பாடு பூச்சி மருந்து தெளிப்பது, அதிக தண்ணீரை உறிஞ்சும் மரங்களை வளர்ப்பதை தடுப்பது போன்ற பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் உள்ளது.

இத்தகைய முக்கியமான அம்சங்களை கொண்ட அறிக்கையை அமலாக்குவதற்கு முன்பு இது குறித்து பரவலான கலந்துரையாடல், கருத்து கேட்புகளை நடத்தி இருக்க வேண்டும். ஏற்கனவே தமிழக முதலமைச்சர் இக்குழு அறிக்கைகளை அமலாக்ககூடாது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் 18. 11.2013 அன்று மாநில அளவிலான பொது வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினையும் இயற்கை வனப் பகுதிகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சரியே. அதேசமயம் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கான முயற்சி பெரும் பாதகங்களை உருவாக்கும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்ச்சிஸ்ட்) சுட்டிகாட்ட விரும்புகிறது. இயற்கை வளங்களும் மக்களின் வாழ்வாதாரங்களும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, உரிய கலந்துரையாடல், ஆழ்ந்த பரிசீலனையும் இல்லாமல் அவசர கோலத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

தற்போதைய பாதகமான பரிந்துரைகளை நீக்கிவிடுவதுடன் பழங்குடிமக்கள், இயற்கையை சார்ந்து வாழும் ஏழைத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரது கோரிக்கைகளையும் உள்வாங்கி மேற்கண்ட அறிக்கையை மறு வரையறை செய்த பின்னரே அமலாக்க வேண்டுமென  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்ச்சிஸ்ட்)-ன் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இதனை வற்புறுத்தி அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு குரல் ஏழுப்ப முன்வர வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 2

மனைப்பட்டா வழங்குவதற்கான அரசாணையை நீட்டித்திடுக

பல்லாண்டுகாலமாக பல்வேறுவகையான புறம்போக்குகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்குவதற்கான அரசாணை 2013 செப்டம்பர் 30ந் தேதியோடு முடிவடைந்துவிட்டது. லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டா கோரி அரசுக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பட்டா வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை வேகப்படுத்துவதுடன் அரசாணையை நீட்டித்து உடனடியாக உத்திரவிட வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது. அத்துடன் கோயில், மடம், வக்ப் வாரியம், தேவாலய இடங்களில் நீண்ட காலமாக குடியிருந்துவரும் மக்களுக்கு குடியிருப்பு உரிமையை பெற்றுத்தரும் வகையில் அரசாணையை வெளியிடவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 3

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கிடுக!

தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய் பரவி கால்நடைகளுக்கு பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மாடுகள் இந்நோய் தாக்கி மாண்டுபோயுள்ளன. பல்லாயிரக்கணக்கான மாடுகள் நோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

தங்கள் வாழ்வாதாரத்தின் முக்கிய சொத்தாக விளங்கும் கால்நடைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு  நிவாரணம் வழங்குவது குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாதது சரியல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

கர்நாடக மாநிலத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்துபோகும் கால்நடைகளுக்கு கறவை மாட்டுக்கு ரூ.25,000/-, கருவுற்றிருக்கும் மாடுகளுக்கு ரூ.20,000/-, இதர  மாடுகளுக்கு ரூ.15,000/- என அறிவித்துள்ளதை கவனத்தில் கொண்டு கோமாரி நோய் தாக்கி  மாண்டுபோன அனைத்து கால்நடைகளுக்கும் அரசு இழப்பீடு வழங்கவேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் வகையில் கூடுதலான  மருத்துவர்கள், போதுமான மருந்துகள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 4

போக்குவரத்துக் கழக  தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 1977 ம் ஆண்டிலிருந்து நேரடி பேச்சுவார்த்தை மூலம் மூன்றாண்டுகளுக்கொருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒப்பந்தம் முடியும் தேதிக்கு முன்பாகவே பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு  அடுத்த ஒப்பந்தம் போடப்படும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

1.9.2013 முதல் போட வேண்டிய  ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இதுவரை துவங்கப்படவில்லை. கடுமையான விலைவாசி மற்றும் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஊதிய பேச்சுவார்த்தை துவக்குவதற்கான அறிகுறிகள் கூட இதுவரை தெரியவில்லை.

போக்குவரத்து கழக நிர்வாகம் கடந்த ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டுள்ள  அடிப்படையில் தினக்கூலிச் சம்பளம் ரூ.496 வழங்குவதற்கு பதிலாக ரூ. 219 மட்டுமே வழங்கிவருகிறது. கடந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட சுழல் முறை போஸ்டிங் உள்ளிட்ட பல சலுகைகளை நிர்வாகங்கள் மறுப்பதும் சரியல்ல. கடுமையான வேலைப்பளு, அதீத தண்டனைகள் போன்ற நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு பணி ஓய்வின்போது வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை உள்ளிட்டவைகள் வழங்க மறுத்து ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆகவே, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் சங்கங்களை  அழைத்து பேசி ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டுமெனவும், முந்தைய ஒப்பந்த சலுகைகளை முழுமையாக  அமல்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 5

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி

ஊரக வளர்ச்சித் துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி புரிந்து வந்த 13. 500 மக்கள் நலப்பணியாளர்கள் 8.11.2011-ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் வேலை கேட்டு வேலையின்றி வாடும் மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நீக்கம் செய்யப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மக்கள் நலப் பணியாளர்களின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 11.11.2013-ல் பிறப்பித்த உத்தரவின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்ததோடு, மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்கம் குறித்த வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதங்களில் உரிய தீர்ப்பு வழங்க உத்திரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை மறு பரிசீலனை செய்து அவர்களை மீண்டும் மக்கள் நலப்பணியாளர் பணியில் அல்லது அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களில் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணியில் அமர்த்தி மக்கள் நலப் பணியாளர்களுக்கும். அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்- 6

புதுக்கோட்டை, தொண்டைமாநல்லூர் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடுக! புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லுர் பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் பயன்படுத்திவரும் 2501 ஏக்கர் நிலத்தின் பயனாளிகளான விவசாயிகளுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் பல்வேறு இனாம் கிராமங்களில் மைனர் மேஜர் இனாம் என பிரித்து பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உகந்த முறையில் தீர்வு கண்டு இனாம் விவசாயிகள் அனைவருக்கும் பட்டா கிடைத்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம்- 7

கந்து வட்டி கொடுமைக்கு முடிவு கட்டுக தமிழகம் முழுவதும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி, மின்னல் வட்டியென கொடுமைகள் அதிகரித்து வருகிறது. வங்கி கடன் எளிதாக கிடைக்காததால், தனி நபர்களிடம் கந்து வட்டியில் சிக்கி விவசாயிகள், வியாபாரிகள், சிறு வணிகர்கள் மிகுந்த துயரப்படுகின்றனர். புதுக்கோட்டையில் டைலர் தொழில் நடத்தி வந்த ஜென்டக்ஸ் உரிமையாளர் கந்து வட்டியில் சிக்கி அக்கும்பல் கொடுத்த நெருக்கடி, அவமானம் தாங்கமுடியாமல் திருவண்ணாமலைக்குச் சென்று குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதில் சேகரும் அவரது மனைவி ஹேமமாலினியும் இறந்தனர். மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு வகையான தொழிலாளர்கள் கந்து வட்டியில் சிக்கியுள்ளனர். கந்துவட்டி கும்பல் மிரட்டல், அச்சுறுத்தல், வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வைப்பது; குடும்ப பெண்களை அவமானப்படுத்துவது; கூலிப்படைகளை வைத்து கொலை செய்வது போன்ற சட்ட விரோதமான செயல்களை துணிந்து செய்கின்றனர். காவல்துறையினரும் கந்துவட்டிக் கொள்ளையருக்கு உடந்தையாக செயல்படும் போக்கு உள்ளது.

எனவே, 2003-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கந்துவட்டி தடை சட்டத்தை முறையாக அமல்படுத்திட வேண்டும். குடும்ப அவமானத்தால், தற்கொலைகள் நடைபெறுவதை  தடுத்திட கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும். மேலும், கந்துவட்டி பேர்வழிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட குறைந்த வட்டியில் எளிய கடன் வசதிகளை வழங்கிட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply