சிபிஐ(எம்)-ன் மாநிலக்குழுக் (05-06.08.2013) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் முறையில் திருத்தம் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:

உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அதிலுள்ள  குறைபாடுகளையும், பாதகமான அம்சங்களையும் போக்க வேண்டுமென்றும், அனைவருக்குமான பொதுவிநியோக முறையை அமலாக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் பல பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டுமென்று கோரின.

ஐமுகூ-2 ஆட்சி துவங்கி 100 நாட்களுக்குள் இத்திட்டம் கொண்டுவரப்படும் என்று குடியரசு தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. பல 100 நாட்கள் இழுத்தடித்துவிட்டு, தற்போது பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனநாயக விரோதமாக அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோக முறை திட்டத்தை கணக்கில் எடுக்காமல், தவறான வறுமைக்கோட்டு அளவுகோலை வைத்து தமிழகத்தில் யார், யார் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக வருவார்கள் என்பதை மத்திய அரசாங்கமே அறிவித்துள்ளது.  மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தின் மீதும், மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. இப்போதைய அவசரச் சட்டம் அப்படியே சட்டமாக்கப்பட்டு அமலாக்கப்படுமானால் தமிழகத்தின் கிராமப்புறத்தில் 62.55 சதம், நகர்ப்புறத்தில் 37.79 சதம் மக்கள் மட்டுமே பலனடைவர். இப்போது பலன் பெற்றுக் கொண்டிருக்கும் பலருக்கு மறுக்கப்படும். இத்திட்டத்தின் அடிப்படையில் மாநிலத்திற்கு மத்திய அரசின் அரிசி, கோதுமை ஒதுக்கீடு குறையும். இதை சரிகட்ட மாநில அரசு வெளிமார்க்கெட்டில் வாங்க வேண்டிய கூடுதல் நிதிச்சுமையை மத்திய அரசு மாநில அரசு மீது சுமத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் இருக்கும் இன்றுள்ள ரேஷன் முறையை சீர்குலைத்து விடும்.

நீண்ட நெடிய போராட்டங்களின் மூலம் பலப்படுத்தப்பட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள பாதுகாப்புகள் கூட இந்த அவசரச் சட்டத்தால் பறிபோகும். எனவே, மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் முறையில் கீழ்க்கண்ட திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

  1. தமிழகத்தில் 50 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். நகர்மயமாக்கல் அதிகரித்துவரும் நிலையிலும், கிராமப்புற வேலை வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையிலும் நகரங்களை நோக்கி இடப்பெயர்வு அதிகரித்துள்ள நிலையிலும் நகர்ப்புற மக்கள் தொகையில் ஏழைகள் விகிதம் அதிகரித்துள்ளது. எனவே, அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்குமான பொதுவிநியோக முறையாக மாற்ற வேண்டும்.
  2. உணவுப் பொருள் என்பதில் சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களும் இணைக்கப்பட வேண்டும்.
  3. நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ என்பதை நபருக்கு மாதத்திற்கு 7 கிலோ அல்லது குடும்பத்திற்கு 35 கிலோ. இதில் எது அதிகமோ அது உரிமையாக்கப்பட வேண்டும்.
  4. மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து இப்போது வழங்கப்படும் உணவுப் பொருட்கள் அளவு குறையக் கூடாது.
  5. பொது விநியோக முறையோடு ஆதார் அடையாள எண், நேரடி பணமாற்றம் ஆகியவற்றை இணைக்கக் கூடாது.
  6. எனவே, மத்திய அரசாங்கம் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை திருத்த வேண்டுமென்றும், ஜனநாயக இயக்கங்கள் இதற்காக குரலெழுப்ப வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

2. கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:

கூடங்குளம் மின் நிலையத்தில் உற்பத்தி பணி துவங்கிவிட்டதாகவும், முதல் அணு உலையைத் தொடர்ந்து, இரண்டாவது அணு உலையிலும் நவம்பருக்குள் உற்பத்தி துவங்குமெனவும் அறிவிப்புகள் வருகின்றன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உத்தவாதப்படுத்துவதற்கு முன்பாக இந்த இரு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தியது. கூடங்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும், போராட்டக்குழுவினர் மீதும் பல நூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென உச்சநீதிமன்றம், இது தொடர்பான வழக்கில் வழிகாட்டியுள்ளது. ஆயினும், இதுவரையிலும் வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெறவில்லை. எனவே, வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகளை அமைக்கும் மத்திய அரசின் அணு உலை பூங்கா திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இத்தகைய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

3. இலங்கை அரசியல் சட்ட 13-வது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிட வலியுறுத்தி:

1987-ல் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் விளைவாக 13-வது அரசியல் சட்டத் திருத்தம் உருவானது. இந்தத் திருத்தம் இலங்கைக்குள் மாநிலங்கள் உருவாக வழிவகை செய்தது. மேலும், தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்தை அளித்தது. இது நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. 13-வது சட்டத் திருத்தம் மட்டுமல்ல, அதற்கு மேலும் நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவிடமும் ஐ.நா மன்றத்திடமும் உறுதி கூறிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறது. குறிப்பாக வடக்கு, வடமேற்கு, மத்திய மாநிலங்களுக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், மாநிலங்களின் அதிகார வரம்பிலிருந்து காவல்துறை மற்றும் நிலம் சம்பந்தமான அதிகாரங்களைப் பறிப்பதற்கு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு முக்கிய அதிகாரங்களையும் அகற்றுவது என்பது, ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்சத் தன்னாட்சி ஏற்பாடுகளை தளர்த்துவதாகவே இருக்கும். போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவினுடைய பரிந்துரைக்கும் இது முரணானது. இது ஏற்புடையதல்ல. இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் ஒரு பகுதி என்கிற முறையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் நீர்த்துப்போகாமல் நடைமுறைப்படுத்தப்படுவதே அங்குள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசியல் நடவடிக்கையாக இருக்கும். சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெறவும், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவும் இந்திய அரசு இலங்கையுடனான தனது அரசியல் உறவினை செயலூக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

4. காவல்துறையின் அத்துமீறல்களை கண்டித்து …

தமிழகம் முழுவதும் காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் கோரிக்கைகளுக்கு இயக்கம் நடத்தினால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பொய் வழக்கு போடுவது,  எதிர்தரப்பினரிடம் புகார் பெற்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு தொடுப்பது போன்ற செயல்பாடுகள் பரவலாக நடக்கின்றன.  எதிர் கட்சிகளின் சார்பில் சுவரொட்டி ஒட்டுவது தடுக்கப்படுகிறது. ஒட்டினால் அவற்றைக் கிழித்தெறிவது, கட்சி அலுவலகங்களுக்குள்ளேயே நுழைந்து சுவரொட்டிகளைக் கிழிப்பது வரையிலான அத்துமீறல்களில் காவல்துறையினர் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.

கலவரங்களைக் கட்டுப்படுத்த அரிதாகப் பயன்படுத்த வேண்டிய 144 தடையுத்தரவை தேவையற்ற முறையில் நீட்டித்து ஜனநாயக இயக்கங்களை முடக்குவது என்கிற தவறான அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது.  காவல்துறையின் ஒருபகுதியினர் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய போக்குகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக காவல்துறை இயக்குநரும், தமிழக அரசும் தலையிட்டு ஜனநாயக இயக்கங்களை முடக்குகிற காவல்துறையின் அத்துமீறும் செயல்பாட்டை தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

5. முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகளை சீரமைத்திடுக:

தமிழ்நாட்டில் கட்டுமானம் உட்பட 15 முறைசாரா தொழிலாளர் நலவாரியங்கள் உள்ளன. இவை பெருகி வரும் முறைசாராத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. இதில் சுமார் 55 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வாரியங்களின் செயல்பாடு ஏறத்தாழ முடங்கிவிட்டது. பயனாளி – தொழிலாளிகளுக்கு பணப்பலன் கிடைப்பது தற்போது எட்டாக்கனியாகிவிட்டது. பணப்பலன் பெற விண்ணப்பிப்பது, பலன் பெறுவது, இதற்காக அடையாள அட்டை பெறுவது என அனைத்து கட்டத்திலும் பல தேவையற்ற நிபந்தனைகள் தொழிலாளர்துறை விதித்துள்ளது. இவை உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டத்தின் நோக்கத்தையும், பிரிவுகளையும் கணக்கில் கொள்ளாமல் விதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உடன் இதில் தலையிட்டு இந்த வாரியங்களை சீரமைத்து, வாரியப் பலன்கள் தங்கு தடையின்றி பயனாளிகளுக்கு சென்றடைய வழிவகை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply