இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், புதுச்சேரி பிரதேசக்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் தோழர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர். கே.பாலகிருஷ்ணன், தமிழ்மாநில குழு உறுப்பினர் வி.பெருமாள், பிரதேச செயலாளர் தோழர் ஆர். இராஜாங்கம் உள்ளீட்ட பிரதேச செயற்கு பிரதேச குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக விவாதித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாகும். இத்தொகுதியில் ஆரம்பம் முதலே மிகப்பெருமளவில் பணம், பொருள் வழங்கப்பட்டு தேர்தல் ஜனநாயகத்தை சீரழிக்கப்படுவதும் கேலிக்கூத்தாக்குவதும் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை முன்வைத்து செல்ல நெல்லித்தோப்பு தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி கட்சியின் சார்பில் அல்லது மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. ஆனால் அதற்கான வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் பங்கேற்கபதில்லை என கட்சியின் பிரதேசக் குழு தீர்மானிக்கிறது.
காங்கிரஸ் கட்சி பின்பற்றிய தாராளமயக் கொள்கையால் நாட்டில் மிக மோசமான சிரழிவுகளையே உருவாக்கியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு அடிப்படைகளை உருவாக்காமல் மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தவும் இல்லை. போட்டியிடும் அதிமுகவும் நவீன தாராளமயக் கொள்கையினை அமலாக்குவதுடன் ஊழல் ஊதாரித்தனத்தில் முத்திரை பதித்துள்ளதாகும். எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை என சிபிஎம் கட்சியின் பிரதேசக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் ஆணையம், தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனநாயகத்தை பணத்தால் வீழ்த்த முயலும் நடவடிக்கைகளை உறுதியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இரா.ராஜாங்கம்
பிரதேச செயலாளர் , சிபிஐ(எம்) , புதுச்சேரி