சிபிஐ(எம்) மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் – அக். 12-13, 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (12.10.15) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 1:

சிவகங்கை சிறுமி வல்லுறவு வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக!

சிவகங்கையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தன் தந்தை, சகோதரன், தாத்தா உள்ளிட்ட பலரால் வெவ்வேறு காலத்தில், குழந்தைப்பருவத்திலிருந்தே தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர் சிலரும் அடக்கம் என்று தெரிகிறது. இதுவரை 26 பேர் குற்றவாளிகளாகப் பட்டியல் இடப்பட்டிருக்கிறார்கள், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன்பே, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கையில் முறையான பிரிவுகளில் வழக்கு பதியப்படவில்லை என்றும். கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் இணைக்கப் படவில்லை என்றும் சிறுமியின் வழக்கறிஞர் கூறியுள்ளார். குற்றவாளிகளின் பெயர்களை சிறுமி கூறிய போதிலும், அவர்களைக் கைது செய்ய சிவகங்கை காவல்துறை ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. கடத்தல், பாலியல் வல்லுறவு, கும்பல் பாலியல் வல்லுறவு, மிரட்டல், போதை பொருட்களுக்குப் பழக்கப் படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் நடந்துள்ளன என்பதும், உயர் மட்ட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலர் குற்றம் இழைத்த பட்டியலில் வருவதும் வழக்கின் தீவிரத்தை உணர்த்துகிறது. சிவகங்கையில் இச்செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுவதாகவும் தெரிகிறது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் காவல்துறைக்கு நற்சான்றிதழ் வழங்கி மகிழ்கிறார். குற்றங்கள் குறைந்திருப்பதாகப் பதிவு செய்கிறார். உண்மையில், 2010 மற்றும் 2014 புள்ளி விவரங்களைப் பார்த்தால் குழந்தைகள் மீதான வன்முறை 3 மடங்காக (835லிருந்து 2354ஆக) அதிகரித்துள்ளதைக் காண முடியும். குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (2012) பிரிவுகள் பல வழக்குகளில் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. பாலியல் குற்றங்களுக்காகக் கடத்துதலை (trafficking) தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஒரு பகுதி காவல்துறையினர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தடுப்பதற்கு, காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ன செய்திருக்கிறார்? ஒட்டு மொத்த சமூகமே கவலைப்பட வேண்டிய இத்தகைய பிரச்னைகள் குறித்துக் கலந்து பேச, சர்வ கட்சி கூட்டத்தையோ, சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வையோ, பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கூட்டத்தையோ கூட்டும் பொறுப்பு தமிழக அரசுக்கு இல்லையா? நடந்தவை, நடப்பவை அனைத்தும் நல்லதாகவே உள்ளன என்பது தான் அரசின் கொள்கையாகத் தெரிகிறது.

தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கு அத்தகைய அணுகுமுறை இல்லை என்பது தான் பிரச்சனை.

சிறுமிக்கு நடந்த இக்கொடுஞ் செயல்களையும், தமிழக அரசின் அலட்சியமான அணுகுமுறையையும், காவல்துறையின் மெத்தனப் போக்கு மற்றும் குற்றத்தில் பங்களிப்பு உள்ளிட்டவற்றையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன்,

  • சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
  • அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
  • முறையாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது, குற்றத்துக்குத் துணை போனதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இபிகோ 166ஏ பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
  • சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞரின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட வேண்டும். சிறுமிக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் 2:

செய்யூர் மாணவி தற்கொலை: கல்வி நிலையங்களிலும் புகார் கமிட்டி அமைத்திடுக!

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, தன் ஆசிரியரின் பாலியல் வல்லுறவு கொடுமைகளை சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியளிக்கும் செய்தி அண்மையில் வெளிவந்திருக்கிறது. தனது தற்கொலை குறிப்பில், தன் வகுப்பு மாணவிகள் வேறு சிலரையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னதாக, அந்த ஆசிரியரின் மனைவியே, தன் கணவன் பல மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அத்தகைய படங்களை வைத்து மிரட்டியே துன்புறுத்துவதாகவும் செய்யூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் செய்தி ஒன்று பத்திரிகைகளில் வந்திருக்கிறது. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த தற்கொலை நடக்காமல் தடுத்திருக்க முடியும்.

பள்ளி ஆசிரியர்களில் சிலர் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்யும் சம்பவங்கள் கவலைக்குரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் வேண்டும். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் படி, கல்வி நிலையங்களிலும் புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். செய்யூர் பிரச்னையில் தகவல் தெரிந்தும் தடுக்காத பள்ளி நிர்வாகம் மற்றும் செய்யூர் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...