சிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் 2014 செப்டம்பர் 23-24 ஆகிய இரு நாட்களில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. மின்கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெறுக:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி வீடுகளுக்கு 15 சதவிகிதமும், தொழில் நிறுவனங்களுக்கு 30 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை வீடுகள், விவசாய பயன்பாட்டிற்கான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயர்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த கட்டண உயர்வு கிராமப்புற, நகர்ப்புற ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களும் கடுமையாக பாதிப்பார்கள். மின் வாரியத்தின் வருவாய் இழப்பினை ஈடுகட்ட உதவிடும் வகையில் கட்டண உயர்வில் ஒரு பகுதியை தமிழக அரசு மின்வாரியத்திற்கு மானியமாக வழங்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தும் வகையிலேயே உள்ளது. அனைத்து மக்களையும் பாதிக்கிற மின்கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற உடனடி நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மின் கட்டண உயர்விற்கான அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனம் முழங்க அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

2. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி ஜனநாயக விரோதமானது:

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் 45 முதல் 50 சதவிகிதம் என்ற அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தல் முறையாக நடைபெறாததால் பெரும்பகுதி மக்கள் வாக்களிக்கவில்லை. வேட்புமனு தாக்குதலுக்கு போதிய அவகாசம் கொடுக்காதது, எதிர்க்கட்சியினரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காதது, மனு தாக்கலுக்குப் பின் எதிர்க்கட்சியினர் வேட்புமனுவை நிராகரித்தது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, தேர்தல் நாளன்று முறைகேடாக வாக்குப்பதிவு செய்தது உள்ளிட்ட பல்வேறு தில்லுமுல்லுகளையும், முறைகேடான செயல்களையும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் நிகழ்த்தியே இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் இந்த வெற்றி முறையானதல்ல, ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.

இத்தகு நிலையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட இடங்களில் நம்பிக்கையோடு கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு:

செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்வெளி ஓடத்தை அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவேற்றியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானை நிறுத்தும் முக்கியமான கட்டம் இன்று நிறைவேறியுள்ளது. விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியாவின் மிகப்பெரும் சாதனையாக உலக அரங்கில் இந்த வெற்றி இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் விண்வெளி விஞ்ஞானம் மேலும் முன்னேறுவதற்கு மங்கள்யான் வெற்றி உதவும்.

இந்த வெற்றிக்காக உழைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், ஊழியர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. வெற்றிகள் தொடர வாழ்த்துகிறது.

 

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...

Leave a Reply