சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கூட்டறிக்கை

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சாதி, மதவெறி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜனநாயகம், கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றின் மீது இந்த பிற்போக்கு சக்திகள் கருத்து ரீதியான தாக்குதல் நடத்துவதோடு, கருத்து சொல்வோரையும், நிறுவனங்களையும் நேரடியாக தாக்குவதும் அதிகரித்திருக்கிறது. இதன் மீது தமிழக அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமலும், வன்முறையில் ஈடுபடும் பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படடு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களை பதிவு செய்யாமல் இருப்பது வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டியிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்வது, பின்னர் இருவர் மீதும் வழக்கு இருக்கிறது, எனவே, சமரசமாக செல்வதற்கு பாருங்கள் என்று கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது என்பதை தமிழக காவல்துறை ஒரு நியதியாகவே பின்பற்றி வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் சாதிவெறி சக்திகளால் தாக்கப்பட்டதும், அதன் பிறகு அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை சமரசத்திற்கு செல்ல நிர்ப்பந்தம் செய்தும், தொடர்ந்து எழுதாமல் இருக்கவும் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் வற்புறுத்தியுள்ளன. 7-3-2015 அன்று உடுமலைப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலைஇரவு நிகழ்ச்சியில் வலதுசாரி, பிற்போக்கு, மதவெறி காவிகும்பல் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்களை பொதுமக்கள் துரத்திய போது காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆயினும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக காவல்துறை இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்போவதாக தெரிவித்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 8-3-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதாக சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நிறுத்த வேண்டுமென்று மதவெறிக்கும்பல் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்துள்ளது. புதிய தலைமுறையும் அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது.

புதிய தலைமுறை அலுவலகத்திலிருந்த பெண் பணியாளர்கள் பலரிடம் இந்தக்கும்பல் நாகரிகமற்று, தரம் தாழ்ந்து சொல்லக்கூசும் வார்த்தைகளால் மிரட்டியுள்ளது. இவை குறித்தெல்லாம் தகவல் அறிந்தும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாகச் சொல்லி அதிகாரிகள் தலைமையில் காவலர்களை குவித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளரை வன்முறைக்கும்பல் தாக்கும்போது அதை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பெண் செய்தியாளர் ஒருவர் இந்தக்கும்பலால் விரட்டப்பட்டிருக்கிறார். அதன் பிறகும் இந்தக்கும்பல் திருப்தியடையாமல் செய்தித்தொகுப்பாளர் ஒருவரின் வீட்டை தாக்குவதற்கு முயற்சித்திருக்கிறது. மற்றொருவரின் மனைவியின் கழுத்தில் இருக்கும் தாலிக்கயிற்றை சிவப்புக்கோடிட்டுக் காட்டி இந்தத் தாலியை அறுத்துட்டு வாங்கடா என்று முகநூலில் பதிவிட்டுள்ளனர். இப்பிரச்சனையில் காவல்துறை இதுவரையிலும் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களை உங்கள் தவறுகளால்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார்கள்.

சாதி, மதவெறி சக்திகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும், தமிழக காவல்துறை அதை வேடிக்கை பார்ப்பது, அல்லது ஊக்குவிப்பது என்று நடந்து கொள்வதும் தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுவதையே இவை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் முற்போக்கு சக்திகள் எச்சரித்தது போன்று அனைத்து வகையான முற்போக்கு கருத்துக்கள் மீதும், முற்போக்காளர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் மீதும் சாதிய, மதவெறி பிற்போக்கு கும்பல் தங்கு தடையின்றி தாக்குதல் நடத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு இத்தகைய வன்முறைக்கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும், கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு, மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு பிற்போக்கு வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தும் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கருத்து சுதந்திரத்திற்காக போராடும் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு நாங்கள் எங்கள் அமைப்புகளின் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி. ராமகிருஷ்ணன்

செயலாளர் – சிபிஐ(எம்)

இரா.முத்தரசன்

செயலாளர் – சிபிஐ

தொல்.திருமாவளவன்

தலைவர் – விடுதலைச் சிறுத்தைகள்

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...