

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. தங்கவேல் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 14 தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (13.09.2020) அதிகாலையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது வீரவணக்கத்தையும் செவ்வஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
சாதாரண குடும்பத்தில் பிறந்த தோழர் கே. தங்கவேல் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பனியன் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களை ஒன்று திரட்டி பல கட்ட போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். ஒன்றுபட்ட கோவை மாவட்ட பனியன் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியவர். அவர் பொறுப்பு வகித்த போது பனியன் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுத்தந்தவர். மேற்கு மண்டலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவராக, மிகச் சிறந்த முறையில் பணியாற்றி தனி முத்திரை பதித்தவர். கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டு, 25 ஆண்டுகளாக பணியாற்றி, பல்வேறு மாவட்டங்களுக்கும் பொறுப்பாக இருந்து வழிகாட்டிய தோழர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட வளர்ச்சி குறித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், தொழிலாளர் நலன்களுக்காகவும் சட்டமன்றத்தில் வாதாடியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அதற்குப்பிறகும் கூட தொகுதி மக்களோடு மிக நெருக்கமாக பழகியவர், அவர்களது சுக, துக்கங்களில் பங்கெடுத்தவர்.
ஆழ்ந்த வாசிப்பாளர். மார்க்சிய கொள்கைகளை விளக்கி தலைமை பண்பு, நேர நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்பெடுக்கும் சிறந்த வகுப்பாசிரியர். பொது வாழ்க்கையில் எளிமையாகவும், தூய்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியவர். மிகச் சிறந்த பண்பாளர். இயற்கையிலேயே அமைதியான குணம் படைத்தவர். கட்சித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனது குடும்ப உறுப்பினர் போல பழகுபவர். தொழிலாளி வர்க்கத்தின் மீது மிகுந்த பற்றும், மார்க்சிய கொள்கையின் மீது உறுதியான பிடிப்பும் கொண்டவராக தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும், குறிப்பாக, மேற்கு மண்டல தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் கே.தங்கவேல் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமெனவும், கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமெனவும் கட்சி அணிகளை மாநிலக்குழுக் கேட்டுக் கொள்கிறது.