சிபிஐ (எம்) மாநில செயற்குழு கூட்டத் தீர்மானம் – 7.6.2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் தலைமையில்  இன்று (7.6.2016)  சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி,  மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன்,  பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

1. சாதி ஆணவ கொலைகளைத் தடுப்பதற்கான உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை உடனடியாக நிறைவேற்றுக :

உசிலம்பட்டி விமலா தேவியின் சாதி ஆணவ கொலையை அடுத்து, அவரது கணவர் திலீப் குமாரின் பெயரில் போடப்பட்ட ரிட் வழக்கில், ஏப்ரல் 2016ல், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இத்தகைய கொலைகளைத் தடுத்திட சிறப்பான வழிகாட்டுதலை அளித்திருக்கிறது. குறிப்பாக,

  • ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், சமூக நலத்துறை அதிகாரி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரியைக் கொண்ட சிறப்பு பிரிவினை (Special cell) உருவாக்க வேண்டும்.
  • இது, 24 மணி நேர சேவையைக் கொண்டதாக இருக்கும். புகார்களைப் பெற, ஆலோசனை அளிக்க, பாதுகாப்பு கொடுக்க என்று அனைத்து சேவைகளையும் இது தரும். மேலும், சாதி ஆணவ மிரட்டலுக்குக் காரணமாக இருக்கும் பெற்றோர், உறவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை ஏற்பாடு செய்யவும் இச்சிறப்பு பிரிவு முன்வரும்.
  • தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களும் இணைய தளத்தின் மூலம் தொடர்பில் இருப்பதால், எங்கு புகார் வந்தாலும் உடனடியாக, தானியங்கியாக முதல் தகவல் அறிக்கை தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • எந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டு, புகார் அளிக்கும் தம்பதியினர் நடமாடுகின்றனரோ, அதன் ஆய்வாளர் தான் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறுவது Major Misconduct ஆகக் கருதப் பட வேண்டும்.
  • முறையாக நடவடிக்கை எடுக்காத அல்லது தவறு செய்யும் காவல் நிலைய அதிகாரிகளை அடையாளம் கண்டு மேல் நடவடிக்கைக்கு, சிறப்பு பிரிவு பரிந்துரை செய்யும்.

நீதியரசர் வி.ராமசுப்ரமணியம் அவர்கள் அளித்திட்ட வழிகாட்டுதல்/  தீர்ப்பு வெளிவந்து 3 மாத காலத்தில்  மாவட்ட வாரியான சிறப்பு பிரிவு அமைக்கப் பட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது, மாவட்ட வாரியான சிறப்பு பிரிவினை அமைப்பதோடு, காவல்துறையினருக்கும், பொது மக்களுக்கும் இத்தீர்ப்பு குறித்த விவரங்களைக் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும் விமலா தேவி கொலை வழக்கை ஒட்டி, உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், தென் மண்டல ஐஜி மேற்கொண்ட விசாரணையில் 47 காவல்துறையினர் தங்களில் கடமையை செய்ய தவறியிருக்கிறார்கள் என்பதும் வெளி வந்திருக்கிறது. அவர்கள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதையும் வற்புறுத்துகிறோம்.

இப்பிரச்னை வெளி வரவும், இத்தகைய வழிகாட்டுதல் கிடைத்திடவும் உதவிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வழக்கறிஞர்கள் உ.நிர்மலா ராணி, காரல் மார்க்ஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். மனுதாரர் திலீப் குமாரின் போராட்டத்தில் தொடர்ந்து துணை நிற்போம்.

2. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துக!

கல்வியாண்டு துவங்கி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் சுயநிதிப்பள்ளிகளில் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென மத்திய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையான சுயநிதி பள்ளி நிர்வாகங்கள் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கு மறுத்து வருகின்றன. சேர்ந்த சில மாணவர்களையும் கல்விக்கட்டணத்தை கட்டவில்லையென்றால் வெளியேற்றி விடுவோம் என நிர்ப்பந்தம் செய்கின்றன. இதுகுறித்து தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.  மத்திய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களை சேர்த்திட மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

25 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் முதலில் முழுக் கல்வி கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் அரசிடமிருந்து நிதி வந்தவுடன் திரும்ப பெற்றுக் கொள்ளும்படி தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை நிர்ப்பந்தித்து வருகின்றனர். எனவே 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிலுவைத் தொகையை அரசு உடனடியாக செலுத்திட வேண்டும்; 25 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தின் கீழ்  சேர்க்கப்படும் மாணவர்கள் பெயர் பட்டியலை தகவல் பலகையில் ஒட்டுவதை உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பின் கட்டண விவரத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்பனவற்றை செயல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் சுயநிதி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கையின் போது அரசு தீர்மானித்த கட்டணத்திற்கு மேல் கூடுதலாக நிர்வாகங்கள் வசூலித்து வருகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் விதிமீறல் உள்ள பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகள் நடக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இம்மாதிரியான பள்ளிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

3. தமிழக மீனவர்கள் கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

45 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 29ம் தேதியில் இருந்து தான் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். முதல் நாளிலேயே மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் 3-வது முறையாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது.

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகு உள்ளிட்ட உபகரணங்களை உடனே திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இரு நாட்டு மீனவ அமைப்புகளின் பேச்சுவார்த்தை ஊக்குவிக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...