மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாட்டில் (பிளீனம்)
கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர்
சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய துவக்கவுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில சிறப்பு மாநாடு (பிளீனம்) திருநெல்வேலியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு (12.11.2016 – 14.11.2016) நடைபெறுகிறது. முதல்நாளான இன்று காலை 10.00 மணிக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்கள் கட்சியின் செங்கொடியினை எழுச்சியுடன் ஏற்றினார். வரவேற்புக்குழு தலைவர் தோழர் வீ. பழநி, (திருநெல்வேலி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்) வரவேற்புரை வழங்கினார். தலைமைக்குழுவாக தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், தோழர் ஆர். கருமலையான், மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தோழர் ராதிகா ஆகியோர் செயல்படுகின்றனர். தோழர் பி. சம்பத் தலைமையுரையாற்றினார்.
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி தனது துவக்கவுரையில் பேசிய ஒரு சில பிரதானமான அம்சங்கள்:
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளின் இளைஞர்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்பிற்கு வருவது, BPO போன்ற அவுட்சோர்சிங் வேலைகள் தடுத்து நிறுத்தப்படும் என்றொல்லாம் பிரச்சாரம் செய்ததன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்காவை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்நிலை என்னவாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் இருந்து மோடி இந்த இரண்டாண்டுகளில் அமெரிக்காவிற்கு 4 முறை போயுள்ளார். பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இளைய பங்காளி போன்று இந்தியா மாறியுள்ளது.
இதனிடையே உலகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக தொடரும் பொருளாதார நெருக்கடி என்பது தொழிலாளர்களின் வாழ்க்கையின் மீது பெரும் சுமையாக விடிந்துள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கையும் நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலினால் எழுந்துள்ள அதிருப்தி இன்று ஒரு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், இடதுசாரிகள் தங்கள் வலிமையை பலப்படுத்துவதன் மூலம் ஒரு அரசியல் மாற்றினை உருவாக்க முனைய வேண்டும். இந்தச் சூழலை வலதுசாரிகள் பயன்படுத்திக் கொண்டு உலகின் பல நாடுகளில் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதும், மக்களை பிளவுபடுத்துவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனை நாம் இந்தியாவில் அனுமதிக்க முடியாது. அதற்கு ஒரு சரியான அரசியல் மாற்றினை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும். அதற்கு நம்மை இன்னும் பலப்படுத்த வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டிலும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பெரும் எண்ணிக்கையில் தொடரும் விவாயத் தற்கொலைகள், அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவை பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபித்துள்ளது. இதோடு ஆண்டிற்கு 1.3 கோடி இளைஞர்கள் வேலை தேடி சந்தையில் நுழைந்து கொண்டிருக்கும் வேளையில் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் குறைவான வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய நாட்டில் தற்போது திடீரென்று 1000 ரூபாயும், 500 ரூபாயும் செல்லாது என அறிவித்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியப் பொருளாதாரம் 90 சதமானம் ரொக்கம் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனையின் மூலம் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசாங்கம் திடீரென்று ரொக்கப்பணமல்லாத பொருளாதாரமாக மாற்ற விரும்புகிறது. இன்டர்நெட் மூலமான நடக்கும் பணப்பரிவர்த்தனை என்பது மிகக் குறைவு. உதாரணமாக மீனவர்களின் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் பிடித்த மீன்களை விற்பனை செய்யும்போது வியாபாரிகள் அளிக்கும் ரூ-1000 அல்லது ரூ.500 வாங்க முடியவில்லை. அதனை வாங்க முடியாது என்பதற்காக வியாபாரத்தை நிறுத்தினால் மீன்கள் அழுகிப் போகும் என்ற நிலை. இது தான் இந்திய நாட்டின் சாதாரண மக்களின் நிலை இன்று. Plastic Economy என்ற பெயரில் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகளை விட்டு மக்களை திசை திருப்பும் ஏற்பாடாகும்.
கறுப்புப் பணம் குறைப்பதற்கான வழி என்று சொல்லப்படுவது சரியல்ல. கறுப்புப் பணங்கள் அந்நிய நாடுகளில் அந்நாட்டு நாணயங்களாகத்தான் வைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதமும் இதனால் கட்டுப்படுத்தப்படப்போவதில்லை. தீவிரவாதிகளுக்கான பணப்பரிவர்த்தனை என்பது ரொக்கத்தில் நிகழ்வதில்லை. அவை மின்னணு பரிவர்த்தனைகளாகத்தான் நிகழ்கின்றன.
ஊழலை தடுத்து நிறுத்துகிறோம் என்ற பெயரில் சொல்லப்படுவதும் சரியல்ல. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் இன்னும் அதிகமாக்குமே தவிர குறைக்காது.
சமத்துவம் என்பதை ஒரேமாதிரி சீரானது என்பதோடு ஒப்பிட முடியாது. இஸ்லாமியப் பெண்களின் துயரமாக உள்ள முத்தலாக் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. அதை பயன்படுத்திக் கொண்டு பொதுசிவில் கோடு என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சி தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமலாக்க முனைந்து கொண்டிருக்கிறது.
குரானின் படி, முத்தலாக் என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வழங்கப்பட வேண்டும். முதலாவது தலாக் டெல்லியில் பாஜகவிற்கு அளிக்கப்பட்டது. இரண்டாவது தலாக் பீகாரில் அளிக்கப்பட்டது. இனிமேல் உத்திரப்பிரதேசத்தில் மூன்றாவது தலாக் அளிக்கப்படும்.
வகுப்புவாதத்தை தன்னுடைய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதை நம்மால் அனுமதிக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு அனுமதிக்காது என்று பேசினார்.