சிறுபான்மையினர் நலன் குறித்த தீர்மானம்

மதவழி சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நீதிபதி ராஜேந்திரசச்சார் ஆணையம் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து, அவர்களது வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் அளித்தது. அதைத்தொடர்ந்து சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா குழு பரிந்துரை செய்தது. இந்த இரண்டு பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் அப்பரிந்துரைகள் மீது மத்திய அரசு எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. சிறுபான்மை இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை, வழிப்பாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. மத்தியில் வகுப்புவாத பாஜக அரசு வந்த பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறைகளால் அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றர். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் எந்தவித விசாரணையுமின்றி 10 முதல் 20 ஆண்டுகள் வரை  சிறையில் வாடும் அவலநிலையுள்ளது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்துக்குட்பட்டவர்களாக கருதி அவர்களுக்கு பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு மற்றும் உரிமைகள் வழங்கிட பரிந்துரைத்தும், அந்த பரிந்துரைகளும் ஏற்கப்படாமல் உள்ளன. இதனால் தலித் கிறிஸ்தவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு அதன்படியான துணைத் திட்டங்கள் வழங்கப்பட்டு சிறுபான்மை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வழிவகை செய்ய மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. வகுப்புவாத சக்திகளின் ஆட்சேபனை அல்லது எதிர்ப்பை காரணம் காட்டி சிறுபான்மை மக்களின் நியாயமான வழிபாட்டு உரிமைக்கு குந்தகமாக அரசு நிர்வாகமும், காவல்துறையும் செயல்படும் நிலைமை உள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதைப்போல் பல ஆண்டுகளாக விசாரணையின்றி  சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு நிவாரணமும், உத்தரவாதமும் அளித்திட  வேண்டும்.  மேலும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமை, வாழ்வாதார உரிமையைப் பாதுகாத்திடவும், வகுப்பு  வெறிசக்திகளின் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் தமிழக அரசை சிபிஐ (எம்)ன் 22வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர் –  எஸ்.ஜி. ரமேஷ்பாபு (கடலூர்)

வழிமொழிந்தவர் –   அகமது உசைன் (குமரி)

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...