சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழகத்தின் எல்லைப் பகுதியான அட்டப்பாடி வனப்பகுதியில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் – சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை கேரள அரசு பெற்றுள்ளது. அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையும் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியும், தமிழ்நாடு அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. தமிழக அரசின் இந்த அலட்சியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஆற்றின் வழியாக தமிழகத்தின் பவானி ஆற்றிற்கு வரும் தண்ணீர் தடைபடும் நிலை ஏற்படும். இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகும். 1980களில் அணை கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும்  இந்த அணை தேவையற்றது என்று கருதப்பட்டதால்  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அணை கட்டும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது தமிழக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகவே மத்திய அரசு சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை கேரளத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழக மேற்கு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் சார்ந்த இந்த பிரச்சனையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டுமெனவும், மத்திய அரசு கேரள அரசுக்கு வழங்கியுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும், அணை கட்டும் முயற்சியினை கேரள அரசு கைவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...