சிறு, குறு தொழில்களுக்கான உற்பத்தி பொருட்களை ஒதுக்கீட்டு பட்டியலிலிருந்து விலக்கும் முடிவை திரும்பப் பெறுக!

மத்திய மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 25, 26, 27 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலக்குழு செயலாருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன். அ.சவுந்தரராசன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை செயலாக்கத்தின் பகுதியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டியலில் இருந்த 800 வகையான பொருட்கள் கடந்த கால மத்திய காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியாளர்களால் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, எஞ்சியுள்ள ஊறுகாய், ஊதுபத்தி, பட்டாசு, எவர்சில்வர் பொருட்கள், தீப்பெட்டி உள்ளிட்ட 20 பொருட்களையும் தற்போது நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் இதுவரை கிடைத்து வந்த மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை சிறு,குறு தொழில் நிறுவனங்கள் இழக்க நேரிடுவதோடு, இந்தத் தொழிலில் ஈடுபடும் பெரிய தொழில் நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல் தொழில் நலிவடைந்து நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்.  இதன் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்களும், 6 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த தொழிலை நம்பி வாழும் சுமார் 60 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, மத்திய பாஜக அரசு சிறு,குறு தொழில் துறை உற்பத்திக்கென ஒதுக்கப்பட்ட பட்டியலில் தற்போது உள்ள 20 பொருட்களை விலக்கும் முடிவை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய மோடி அரசை வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு தமிழகத்திலுள்ள சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களையும், அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் பாதுகாக்க மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் ! கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது !!

தமிழக மின்சார வாரியம் கடந்த 4 மாதங்களுக்கான மின்கட்டணத்திற்கான வசூலை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட இந்த ...