சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் முன் முயற்சியில் வீடியோ கான்பரன்ஸ் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது. தொழில் முனைவோர் அமைப்புகளின் சார்பிலும் வங்கிகளின் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

ஹரி தியாகராஜன்(Confederation of Indian Industries), ஜெகதீசன் (சேம்பர் ஆப் காமர்ஸ்), முருகானந்தம் (மடீசியா), சதீஸ் (Confederation of Indian Industries), வெங்கடேசன் (சௌராஷ்டிரா தொழில் முனைவோர் சங்கம்), பாலசுப்பிரமணியன் (உணவு பொருள் உற்பத்தியாளர் சங்கம்), அறிவழகன் (Lead Bank), இராமலிங்கம் (District Industries Centre) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர்.  தொழில் நிறுவனங்களின் நெருக்கடியான நிலை, அவற்றிலிருந்து மீள்வதற்கான தேவை, அவற்றை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு கடன் வசதி திட்டத்தின் மதிப்பீடு  ரூ.606.04 கோடி.  மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 32 வங்கிகள் மற்றும் அதனுடைய கிளைகளின் மூலமாக தேசிய வங்கிகள் ரூ.122.77 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.156.68 கோடியும், மொத்தம் ரூ.281.37 கோடி கடன் இதுவரையிலும் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டு தொகையான ரூ.606.04 கோடியும் முழுமையாக தொழில் முனைவோருக்கு சென்றடைவதற்காக பிரத்தியேக சிறப்பு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்டேசன் தெரிவித்தார்.

எளிமையான வழிமுறைகள் மூலமாக கடன் வழங்குதல், பிணை கோருதலில் தளர்வு, வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் கூட்டத்தில் தொழில் முனைவோர் சார்பாக முன்னிறுத்தப்பட்டது.

வங்கி அதிகாரிகள், மாவட்ட தொழில் மையத்தின் அதிகாரிகளின் விளக்கங்கள் அளித்ததோடு, தொழில் முனைவோர் தெரிவித்த ஆலோசனைகளையும் செயல்படுத்துவாதாக உத்தரவாதமளித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சி வெகுவாக பாராட்டப்பட்டது.  நெருக்கடியான காலகட்டத்தில் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் சிரமங்களையும், அவற்றிலிருந்து மீள்வதற்கான கூடுதல் தேவைகளையும் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதாக சு.வெங்கடேசன் அவர்கள் உறுதியளித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நிதியமைச்சரைச் சந்தித்து முறையிடுவதாகவும் தெரிவித்தார்.

தொழில் முன்னேற்றத்திற்கான இத்தகைய கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குறுதியோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...