சிறு வணிகர் கடன் – ஆளும் கட்சி அடாவடி! – அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (2.2.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

சிறு வணிகர் கடன் ! ஆளும் கட்சி அடாவடி !!

அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் சிறுவணிகம் செய்பவருக்கு ரூபாய் 5,000 வட்டியில்லா கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணத்தை வாரம் ரூபாய் 200 வீதம் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளது. ஆரம்பத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் இந்த கடன் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அஇஅதிமுகவினர் சிறுவணிகர் அல்லாதோரிடம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்து மாவட்டங்களில் இலக்கை நிர்ணயித்து கடன் வழங்க வேண்டுமென்றும் தகுதி இல்லாதோருக்கு கடன் வழங்கவும் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அரசு மற்றும் மக்களின் பணத்தை சிறு வணிகர்கள் என்கிற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்று கொடுக்க அதிமுகவினர் முயற்சித்து வருகிறார்கள். சிறுவணிகர் அல்லாதோருக்கு கடன் கொடுக்க வங்கி ஊழியர்களையும், அதிகாரிகளையும் அதிமுகவினர் நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகின்றனர். தமிழக அரசும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு சிறுவணிகக் கடன் தகுதியுள்ள சிறுவணிகர்களுக்கு கொடுப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்றும், தகுதியான அனைத்து சிறுவணிகர்களுக்கும் இக்கடனை வழங்கவும், தகுதியற்றவர்களுக்கு தேர்தல் நோக்கிலிருந்து இப்பணம் கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டுமென்றும், நிர்ப்பந்தித்து மிரட்டும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

தோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தோழர் தொல் திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங் பரிவார் அவர் மீது தாக்குதல் ...