சிவகங்கை, அரசனூர் தலித் மக்கள் மீது தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்

சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் மீது நேற்று (8.9.2016) மாலை 8 மணியளவில் அதே கிராமத்தைச் சார்ந்த மற்றொரு சமூகப் பிரிவினர் சாதிய வன்மத்தோடு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பலர் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீதும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தலித் மக்களின் 45 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரப் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. அன்றைய தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில் புகுந்து சாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசிக் கொண்டே விருந்தினர்களுக்கு தயார் செய்த உணவு மற்றும் பதார்த்தங்களை சேதப்படுத்தியுள்ளனர், விருந்தினர்கள் கொடுத்த மொய்ப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கிராமத்தில் உள்ள மின்சார விளக்குகள் நொறுக்கப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசனூர் கிராமத்தில் தலித் மக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சற்று விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் மற்றொரு சமூகத்தினர் தலித் மக்கள் மீது  இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். மற்றொரு சமூகப் பிரிவினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி நிகழ்விற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா வந்து சென்றுள்ள பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு எடுத்துச் சென்று தலித் மக்களை தாக்கிய வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும்  பாதுகாப்பு வழங்கிடவும் கோரியுள்ளார். ஆனால் இதுவரை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

எனவே அரசனூர் தலித் மக்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், தலித் மக்களின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும், வீடுகள் மற்றும் பொருட்கள் உள்ளிட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...