சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, முதலிபட்டியில் செயல்படும் ஓம்சக்தி ஃபயர் ஒர்க்ஸில் நடைபெற்ற கோரமான வெடி விபத்தில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமையும் கவலைக்கிடமாகவே உள்ளது. சமீப காலமாக நடந்துள்ள பட்டாசு ஆலை விபத்துக்களிலேயே இது மிகவும் கொடூரமானதாகும். மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்த அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டாசு ஆலைகளில் தொழிலாளருக்குரிய பாதுகாப்பு விதி முறைகள் தொடர்ந்து மீறப்படுவதாகப் புகார்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஏழைகளின் உயிர் குறித்து போதுமான அக்கறை, ஆலை உரிமையாளர்களுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இல்லை என்பதைத் தான், அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் மற்றும் வழிமுறைகள் கடைபிடிக்காமை, பட்டாசு செய்யும் அறைக்குள் கூடுதலான தொழிலாளர்கள், கூடுதல் வெடி மருந்து இருப்பு, கண்காணிப்பாளர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ போதுமான பயிற்சி கொடுக்காமை என்பதெல்லாம் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக முன்னுக்கு வருகின்றன. குறிப்பாக, ஃபேன்ஸி சரக்குகளுக்கான மருந்து பொருட்கள் சிறு உராய்வு ஏற்பட்டால் கூட எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளது. கூடுதல் நிறம், வெடிப்பு, பூ சிதறலுக்காக, அபாயகரமான பல பொருட்கள் கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவை குறித்தெல்லாம் முழு தகவல்கள், தொழிலாளர்களுக்கு அளிக்கப் படுவதில்லை.

பொதுவாக, பட்டாசு ஆலை தொழிலாளர்கள் நிரந்தரப் பணியில் வைக்கப்படுவதில்லை. பீஸ் ரேட் என்னும் போது, வேகமாக செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் எழுகிறது. உரிமையாளர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொடர்ச்சியான உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது, மிகுந்த கண்டனத்துக்குரியது. சிவகாசி மருத்துவமனை, இத்தகைய அவசரநிலையை எதிர்கொள்ளக் கூடியதாக இன்னும் தரம் உயரவில்லை.

இந்தப் பின்னணியில், கீழ்க்கண்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கிறது:

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை, நிதி உள்ளிட்டு மறு வாழ்வுக்கான உதவிகளை அளிக்க வேண்டும். ஓம்சக்தி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் லீசுக்கு எடுத்து நடத்துபவர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். விதிமுறை மீறல்கள் குறித்து அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளிகளின் பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்வதில் அரசு உறுதியாக செயல்பட வேண்டும்.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply