சிவகாசி பட்டாசு கடை விபத்து: மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சிவகாசி நகர் பைபாஸ் சாலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை ஒன்றில் வியாழனன்று நிகழ்ந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோரச் சம்பவம் மிகவும்  அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, காயமடைந்துள்ளவர்களுக்கு முழுமையான உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

விபத்துக்குள்ளான பட்டாசு கடை, மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. லாரியில் பட்டாசு இறக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் சென்டருக்கு வந்த மற்றும் பணியாற்றியவர்கள் தப்பிக்க வழியின்றி, மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். அருகில் இருந்த சில கடைகளும் கருகி சாம்பாலாகியுள்ளன.

மருத்துவமனைக்கு அருகில் பட்டாசு கடை வைக்க அதிகாரிகள் எவ்வாறு அனுமதி வழங்கினர் என்ற கேள்வி எழுகிறது. கடை உரிமையாளர் மீதும், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கிக் கொண்டு விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்படும் கடைகளால் மக்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும் என்று மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...