சுங்கச் சாவடி கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

1.4.2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (1.4.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் – 1

சுங்கச் சாவடி கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இந்திய நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்று உருவாக்கி அவற்றில் எல்லாம் கட்டண வசூலிப்பு என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கான சட்டத்தை முந்தைய பாஜக அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் இப்போது கட்டண உயர்வை எதிர்க்கிற திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது சட்டமசோதாவை ஆதரித்தன. இப்போதும் கூட பாஜக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் இமாலய சாதனையாக அவ்வப்போது நான்குவழிச்சாலை நாங்கள் போட்டோம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்ட போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரி கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. இன்று நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விலைவாசி மொத்த குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை ஏற்றிக் கொள்வதற்கு அந்த சட்டம் வழிவகை செய்தது. நாளுக்கு நாள் மக்கள் மீது தொடர் சுமையை இந்த சுங்க கட்டணம் கூடுதலாக ஏற்றி வருகிறது. கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு பேருந்து போக்குவரத்துக் கழகங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஏற்றப்படும் சுங்க கட்டணத்தை பெரும்பாலும் பொதுமக்களே ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இத்தகைய நிலைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட அனைத்து பகுதி மக்களும் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது மத்திய அரசாங்கம் இந்த கட்டணம் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் சுங்கச்சாவடிகளை படிப்படியாக கைவிடவும் ஒப்புக் கொண்டது. ஆனால் தற்போதுள்ள பாஜக அரசின் வழக்கமான வாக்குறுதி போல இதைப்பற்றியும் அந்த அரசு கவலைப்படவில்லை. நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களும், வாகன உரிமையாளர்களும் போராட்டங்கள் நடத்திய பிறகு சில சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக சுங்க கட்டண விகிதங்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்; எதிர்வரும் காலங்களில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றும் முறையில் உரிய மாற்றங்களை மத்திய சட்டத்தில் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2

மதுவை எதிர்ப்பது தேசத் துரோகமா?

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் சார்பாக மதுவிற்கு எதிராக கடந்த பிப்ரவரி 14ந் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மது விற்பனையை அஇஅதிமுக அரசாங்கம் தன்னுடைய கொள்கையாகவும், அதை எதிர்த்து பேசுவதை சகிக்க முடியாத தேச விரோத செயலாகவும் கருதுவது கடும் கண்டனத்திற்குரியது. மதுவிற்கு எதிரான பிரச்சாரத்தை கூட சகித்துக் கொள்ள முடியாமல் அஇஅதிமுக அரசு இருப்பதை பார்க்கிற போது மதுவின் மூலம் அரசுக்கு வருமானம் என்பதை தாண்டி அரசின் உயர் பொறுப்புக்களில் உள்ளவர்கள் மற்றும் அவர்களோடு நெருக்கமாக உள்ளவர்களுக்கு மது உற்பத்தி விற்பனையின் மூலம் கிடைக்கும் முறையற்ற வருவாய் தெளிவாக தெரிகிறது. மதுவிற்கு எதிரான எந்தவொரு போராட்டமும் தங்கள் அடிமடியில் கை வைப்பதாக நினைக்கும் அவலத்திற்கு அஇஅதிமுக அரசு போயிருக்கிறது. தமிழக மக்களின் நலன், பொதுக் கருத்து எல்லாவற்றையும் தாண்டி ஆட்சியிலிருப்போர் மற்றும் அவர்களோடு நெருக்கமாக இருப்போர்களின் நலனை தவிர வேறு எதன் மீதும் அவர்களுக்கு அக்கறையில்லை என்பதை இது காட்டுகிறது.

தேச துரோகம் குறித்த இ.பி.கோ. 124 ஏ பிரிவு நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் தங்கள் நலத்தை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பயன்படுத்தியிருப்பது ஜனநாயகத்தையும், தேச பக்தியையும் எள்ளி நகையாடும் செயலாகும்.

இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இந்த வழக்குகளை கைவிட வேண்டுமென்றும், இந்த வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...