சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் லட்சுமிக்கு மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான 98 வயதான தோழர். கேப்டன் லட்சுமி இன்று (23.7.12) காலை  கான்பூரில் இயற்கை எய்தினார்.

புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்த கேப்டன் லெட்சுமி தனது கல்வியை சென்னை நகரத்தில் கற்றதோடு மருத்துவத்துறையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1938ல் மருத்துவ படிப்பை முடித்த கேப்டன் லட்சுமி சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சுபாஷ் சந்திரபோசை சந்தித்து இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து ஜான்சி ராணி பெண்கள் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இந்திய தேசிய ராணுவத்தில் தீரத்துடன் பணியாற்றிய தோழர் லட்சுமி மருத்துவர் என்கிற முறையில் பல உயிர்களை காப்பாற்றியவர். இங்கிலாந்து ராணுவத்தால் 1946-ல் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார்.

சுதந்திரத்திற்கு பின்னர் கான்பூரில் தனது மருத்துவ சேவையை தொடர்ந்த கேப்டன் லட்சுமி பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு கட்டணம் ஏதுமின்றி மருத்துவ சேவையை செய்து வந்தார். வங்க தேச அகதிகள், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோர், போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோர் என்று மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடிச் சென்று தனது குழுவினருடன் மருத்துவ சேவையாற்றியவர்.

பெண்ணுரிமை போராட்டத்திலும், ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் முன்னின்றவர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். இந்தியாவில் ஒரு சோசலிச புரட்சிக்கான தேவையை உணர்ந்து அதற்காக தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யில் இணைத்துக் கொண்டு இறுதி வரை அந்த லட்சியத்திற்காக போராடியவர்.

இளம் தலைமுறையினருக்கு உத்வேகமளிப்பது அவருடைய வாழ்க்கை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தோழர் கேப்டன் லட்சுமி அவர்களுக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply