சுப்பிரமணியன் லாக்கப் மரணம்-வழக்கை சிபிஐ விசாரிக்க சிபிஐ(எம்) எம்.எல்.ஏ.. வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (6.7.2015) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்.


06-07-2015

பெறுநர்

            மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச்செயலகம்,

            சென்னை 600 009.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள் :         கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரம் மும்தாஜ் படுகொலை – விசாரணைக்கு அழைத்து சென்ற எலிசபெத் க/பெ.டேனியல் – காவல்நிலையத்தில் சித்ரவதை – சுப்ரமணியன் – தினக்கூலி தொழிலாளி – சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் அடைத்து சித்தரவதை- மரணம் – சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிடுவது – தவறிழைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை – கணவனை இழந்த ரேவதிக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்கிட கோருவது தொடர்பாக.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வட்டம் 3ல் மும்தாஜ் என்ற பெண் 23-5-2015 அன்று பகல் நேரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் எலிசபெத் க/பெ.டேனியல் என்பவரை நெய்வேலி நகர் காவல்துறையினர் மோசமாக தாக்கி சித்தரவதை செய்துள்ளார்கள். சென்னையில் சிகிச்சை பெற்ற பின்னரே இவர் உடல் தேறியுள்ளார்.

இதே வழக்கு தொடர்பாக மேற்கண்ட எலிசபெத்தின் உறவினரான சுப்ரமணியன் என்பவரை 28-5-2015 அன்று நள்ளிரவில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளனர். காவல்நிலையத்தில் அடைத்து வைத்து இருந்த சுப்ரமணியை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உடல் முழுவதும் காயத்துடன் அவர் பேச முடியாமல் அவதிப்பட்டதை பார்த்து கதறியுள்ளனர்.

சித்தரவதையால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட சுப்ரமணியனை காவல்துறையினர் அவசர, அவசரமாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் ஜூன் 5-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நடந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இன்னொரு கொலை நடந்துள்ளது. அதுவும் சுப்ரமணியனை சுமார் 8 நாட்கள் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டின் அடைத்து வைத்து விசாரணை நடத்தியது சட்டவிரோதமாகும். அதற்கு முன்னர் எலிசபெத் க/பெ.டேனியல் என்பவரை பெண் என்றும் பாராமல் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து கொடுமை செய்துள்ளனர்.

விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், அரசின் விதிமுறைகள் மோசமாக மீறப்பட்டுள்ளன. எந்த பின்புலத்தில்காவல்துறையினர் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

மேற்கண்ட சம்பவம் நடைபெற்று ஒருமாதம் கடந்து விட்ட நிலையிலும் இதுவரையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கையோ, உரிய புலன் விசாரணையோ மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு தவறிழைக்கும் காவல்துறையினரை பாதுகாத்திடவும், சுப்ரமணியன் மரணத்துக்கான தடயங்களை, சாட்சிகளை அழிப்பதற்கே உதவி செய்யும் என்பதை தங்களது மேலான கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  • ¨எனவே, மும்தாஜ் கொலை வழக்கு மற்றும் எலிசபெத் சித்தரவதை, சுப்ரமணியன் மரணம் உள்ளிட்ட மொத்த வழக்கையும் சிபிஐ புலன் விசாரணைக்கு தமிழக அரசு ஒப்படைத்திட வேண்டும்.
  • ¨குறிப்பாக சுப்ரமணியன் மரணம் தொடர்பான வழக்கை உடனடியாக கொலை வழக்காக மாற்றி அதற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • ¨மரணமடைந்த சுப்ரமணியன் குடும்பம் தினக்கூலி தொழிலாளர் குடும்பமாகும். அவருக்கு ரேவதி (வயது 30) என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், மற்றும் ஒரு ஆண்டு கைக்குழந்தையும் உள்ளது. மேற்கண்ட சம்பவத்தால் 31-5-2015 அன்று பள்ளி கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற ஆய்வக உதவியாளர் நேர்முகத்தேர்வில் அவர் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது.

எனவே, ரேவதிக்கு அரசு வேலையும், அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியும் அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தங்களன்புள்ள,

/ஒப்பம்/

(கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,)

சிதம்பரம் தொகுதி

Check Also

அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக ...