சூரிய ஒளி மின்சாரத்திற்காக அதானிக் குழுமத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு கை விட வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் ஜுலை 23,24 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் ஈரோட்டில் கூடியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், மாநிலச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-


சூரிய ஒளி மின்சாரத்திற்காக அதானிக் குழுமத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு கை விட வேண்டும்!

தமிழக அரசாங்கம் அதானி குழுமத்துடன் 648 மெகா வாட் மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வரையறுத்துள்ள அளவை தாண்டி முதலீட்டுத் தொகை மற்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மெகா வாட்; உற்பத்திக்கு 2015-16ம்; ஆண்டிற்கு முதலீட்டுத் தொகை ரூ. 6.08 கோடி என்று மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு தொகை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசாங்கம் ஒரு மெகா வாட் மின்சாரத்திற்கு: ரூ. 7 கோடி முதலீடு என நிர்ணயித்து இருப்பது கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி நிர்ணயிப்பதற்கான வழியாகும். மேலும் உற்பத்தியாளருக்கு முதலீட்டு தொகையில் 20 சதவீதம் லாபம் நிர்ணயிக்கப்பட்ட பிறகும்; கூடுதலாக கொள்ளை லாபம் கிடைக்கும் வகையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 7.01 என நிர்ணயித்து இருப்பது அதானி குழுமத்திற்கு முறைகேடாக தமிழக மக்களின் வரிப் பணத்தை மடை மாற்றம் செய்ய வழி வகுப்பதாகும்.

இதே காலத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் சுமார் 6 ரூபாய் அளவிற்கு தருவதற்கு அதானி குழுமம் விண்ணப்பித்து இருந்த நிலையில், வேறு ஒரு நிறுவனம் சுமார்; ரூ. 5/-ற்கு தர முன்வந்துள்ளதால் அதானி குழுமத்தின் டெண்டர் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்களோடு ஒப்பிட்டால், தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 2 கூடுதலாக தருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 13 லட்சம் ரூபாய் அதானி குழுமத்திற்கு லாபத்தினை தாண்டி கொள்ளை அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைகேடானது, ஊழலுக்கு வழி வகுப்பது.

எனவே, தமிழக அரசு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. ...