சூறையாடப்படும் தென்பெண்ணை… தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… விழுப்புரத்தில் மே 4ல் மாநில செயலாளர் ஜி.ஆர் தலைமையில் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதை தீர்த்திடக் கோரியும்,, இதற்கு காரணமான தென்பெண்ணையாற்று மணல் கொள்ளையை தடுத்து நீராதாரங்களை பாதுகாக்கக் கோரியும் மே 4ஆந்தேதி திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டக்குழுக்கள் சார்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக ஏப்ரல் 11 செவ்வாயன்று தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடைபெறும் பல இடங்களை நேரில் ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையிலான ஆய்வுக்குழு பல்வேறு அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளை சந்திக்க நேர்ந்தது. அதன்பின் விழுப்புரத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது என்.குணசேகரன் கூறியதாவது;

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு மணல் குவாரி என்ற பெயரில் நடைபெறும் மணல் கொள்ளையால் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரங்கள் வற்றி வறண்டுபோய் உள்ளன. மேலும் கிணறு, குளம், ஏரிகள் என அத்தனை ஆதாரங்களும் பெருமளவில் தூர்ந்துபோய்விட்ட நிலையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர்கோரி சாலைமறியல் செய்துவரும் நிலையில் இதற்கான பிரதான காரணமாக இந்த ஆற்றுமணல் கொள்ளை திகழ்கிறது.

This slideshow requires JavaScript.

மணல் எடுப்பதற்கான அரசின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றது. 3 அடிக்கு கீழ் மணல் எடுக்க அனுமதியில்லை என விதி இருந்தாலும் பத்திலிருந்து இருபடி ஆழத்திற்குமேல் மணல் சுரண்டப்பட்டு தெண்பெண்ணையாறு கட்டாந்தரையாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆளுங்கட்சியினரின் பரிபூரண நல்லாசியோடு தற்போதும் திருக்கோவிலூர் வட்டத்தில் கீழக்கொண்டூரில் மட்டும் அரசு அனுமமதிபெற்ற குவாரி இயங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கண்டாச்சிபுரம் வட்டத்தில் காக்காகுப்பம், ஆவியூர், மரகதபுரம் என பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் சூறையாடப்படுவது தொடர்கிறது.

குறிப்பாக காக்காகுப்பம் கிராமத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்குமேல் பகாசுர ஜேசிபிகள் மூலம் டாரஸ் லாரிகளில் மணல் அள்ளிக்கொட்டப்பட்டு 1நிமிடத்திற்கு 2,3 லாரிகள் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சென்று கொண்டிருக்கின்றன.

இதன் காரணமாக விவசாயம் கடும் பாதிப்படைந்துள்ளது. வறட்சி கோரத்தாண்டவமாடுகிறது. சின்னசேலம்,  செஞ்சி, அனந்தபுரம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் என பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி மாவட்டம் முழுவதும் குடிநீருக்கு காலிகுடங்களுடன் பெண்கள்   பல கி.மீ அலையும் அவலம் நிலவுகிறது.  விவசாய நிலங்கள் தரிசாக போடப்பட்டுள்ளன. பிற தேவைகளுக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் குவாரி வேண்டாம் என மக்கள் போராடும்போது காவல்துறையினரால் அப்போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. அல்லது முன்னாள் ,இந்நாள் ஆளுங்கட்சியினர் உள்ளிட்டோரை உரிய வகையில் கவனிக்கின்றனர். மேலுமம் அருகிலுள்ள கிராமங்களின் அப்பாவி ஏழைமக்களை உள்ளூர் கோவில்களுக்கு நிதி தருவதாகக்கூறி எதிர்ப்புகளை பிசுபிசுக்க வைக்கின்றனர்.

பகாசுர மணல் லாரிகள் மற்றும் டாரஸ் லாரிகளால் கிராமப்புற சாலைகள் சேதமடைந்து விபத்து மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே விழுப்புரம் மாவட்ட மக்கள் நீராதாரத்திற்கு மிக முக்கியமாக நம்பியுள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரிகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்திடக்கோரி எதிர்வரும் மே 4ஆந் தேதி காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் திருக்கோவிலூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், கே.கலியன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, வடக்கு மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, வட்ட செயலாளர்கள் எஸ்.வேல்மாறன், எம்.முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பில் என்.குணசேகரன் கூறினார். உடன் கட்சியின் இருமாவட்டத் தலைவர்களும் இருந்தனர்.

 

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...