சென்னையில் இயங்கும் செம்மொழி ஆய்வு மையத்தை சீர்குலைக்கக் கூடாது

7-7-2017

சென்னையில் இயங்கும் செம்மொழி

ஆய்வு மையத்தை சீர்குலைக்கக் கூடாது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 

தமிழ், செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பிறகு இதன் தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டன. முக்கியமான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்க வேண்டுமென பணிக்கப்பட்டது.

மாநில அரசின் வற்புறுத்தலுக்குப் பிறகு அதுவரையில் மைசூரில் இயங்கி வந்த ஆய்வு மையம் சென்னைக்கு மாற்றப்பட்டு 2008 முதல் சென்னையில் மத்திய தமிழ்ச்செம்மொழி ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இருப்பினும் சென்னையில் உள்ள மத்திய செம்மொழி ஆய்வு மையம் பல பணிகளை செய்து வருகிறது.

திடீரென்று நிதிஆயோக் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு சென்னையில் சுயேச்சையாக இயங்கி வரும் மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை மூடிவிட்டு இதை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகின்றன.

இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு அடுத்தக்கட்டமாக தமிழ் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள பல்கலைக்கழகத்தோடு இணைத்தால் ஆய்வு மையத்தின் சுயேச்சையான பணி பாதிப்புக்குள்ளாகும்.

சென்னையில் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுகின்ற முயற்சியை கைவிடுமாறு மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் சென்னையில் இம்மையம் சிறப்பாக செயல்பட மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...