சென்னை ஐஐடியில் கருத்துரிமைக்கு வாய்ப்பூட்டு! சிபிஐ(எம்) கண்டனம் !!

சென்னை ஐ.ஐ.டி.-யில் செயல்பட்டு வரும் அம்பேத்கார் -பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு இந்திய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜக-வின் பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளை விமர்சித்ததற்காக அந்த அமைப்புக்கு அங்கீகாரத்தை ஐ.ஐ.டி-யின் டீன் ரத்து செய்துள்ளார்.

இந்த பொருள் குறித்து அம்பேத்கார் பிறந்த தினத்தன்று ஆந்திர பிரதேச மாநிலம் குப்பம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆர்.விவேகாநந்த கோபால் அவர்கள் பங்கெடுத்த நிகழ்ச்சி குறித்து மேற்கண்ட அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கை குறித்து ஒரு அனாமதேயக் கடிதத்தை சங் பரிவார அமைப்பினர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியதையொட்டி, மத்திய மனிதவள அமைச்சகத்திலிருந்து இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. உடனடியாக ஐ.ஐ.டி.-யின் டீன் மேற்கண்ட அமைப்புக்கான அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறார். இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயறகுழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்த கடந்த ஓராண்டு காலமாகவே கருத்துரிமையின் மீதும், மாற்றுக்கருத்துக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் கடும் தாக்குதலை சங் பரிவார் அமைப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களை, பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குவதும், தொலைக்காட்சி நிறுவனங்களை தாக்குவதும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் சங்பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகளை விமர்சிப்போரை மிரட்டுவது, நிர்வாகத்தை பயன்படுத்தி வாயடைப்பது மற்றும் வெளியேற்ற நிர்ப்பந்திப்பது ஆகிய முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் அதன் துணை அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே அம்பேத்கார், பெரியார் வாசகர் வட்டம் என்கிற மாணவர் அமைப்புக்கு அங்கீகாரத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஐ.ஐ.டி நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். எவ்வித விசாரணையுமின்றி சங்பரிவார் அமைப்புகள் கேள்வி எழுப்பினாலே கருத்து சுதந்திரத்தை பறித்த ஐ.ஐ.டி டீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்துப்பகுதி ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இத்தகைய காலத்திற்கு ஒவ்வாத, நாகரிகமற்ற, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிக்க முன்வர வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...