சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு‍!

சென்னை மாநகராட்சிக்கு இன்று (17.10.2011) நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கூலிப்படையினர் உதவியோடு 35, 104, 50, 76 ஆகிய வார்டுகளில் முறைகேடுகள் நடத்தியிருப்பதால் இந்த வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், மாநிலத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு இன்று (17.10.2011) அனுப்பியுள்ள கடிதம் பின் வருமாறு‍:-


17.10.2011
 

பெறுநர்
மாநில தேர்தல் ஆணையர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,
208/2, ஜவஹர்லால் நேரு சாலை,
அரும்பாக்கம், சென்னை 600 106.
 

அன்புடையீர், வணக்கம்.
 

சென்னை மாநகராட்சிக்கு இன்று (17.10.2011) நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கூலிப்படையினர் உதவியோடு கள்ள வாக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட 35வது வார்டு தேமுதிக வேட்பாளர் எம். வேல்முருகன் மற்றும் அவரது சகோதரர்கள் எம். சரவணன், எம். பிரபு ஆகியோர் சமூக விரோதிகளால் கத்தியால் வெட்டப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரின் கூலிப்படையினரை உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் சென்னை மாநகராட்சி தேர்தலில் சமூக விரோதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் – 35வது வார்டில் வாக்குச்சாவடி எண் 324, 325, 326, 327-ஆ, பெ, 328, 104வது வார்டில் வாக்குச்சாவடி எண் 1740, 1743 ஆ, 1743 பெ, 1745, 1746, மற்றும் 50 வது வார்டில் அனைத்து வாக்குச்சாவடிகள், அதேபோல் 76வது வார்டில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் கைப்பற்றி முறைகேடுகள் நடத்தியுள்ளனர்.

அதேபோல 47வது வார்டு பாகம் எண்.22ல் மீனாம்பாள் நகர் சத்துணவுக் கூடத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 636-ல் தேர்தல் அலுவலர் விஜயராஜன் அவர்களின் ஒத்துழைப்போடு ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வரிசை எண் 486 முதல் 500 வரை 15 வாக்குகளை கள்ளவாக்காக பதிவு செய்துள்ளனர்.

எனவே இந்த வாக்குச்சவாடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து மறு தேர்தலுக்கு உத்திரவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

 

நன்றி
 

தங்களன்புள்ள,
/ஒப்பம்
(ஜி.ராமகிருஷ்ணன்)
செயலாளர் 

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply