ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்க!

அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை;

தலைமைத் தேர்தல் ஆணையர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களுக்கு அக்டோபர் 24 அன்று தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்திருப்பது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாகும். அங்கே “இயல்பு நிலை” திரும்பிவிட்டதாக உலகத்திற்கு காட்டிக் கொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உண்மையில் கடந்த இரு மாதங்களாக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு தகவல் தொடர்புகள், மக்களின் இயல்பு வாழ்க்கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் சிறைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்கிறது. இந்நிலையில் அங்கே வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்கள் மோசடியான ஒன்றே தவிர வேறல்ல.

மேலும், வட்டார வளர்ச்சிக் கவுன்சிலுக்கான வாக்காளர் தொகுதி, அங்குள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர்களையும் உள்ளடக்கியதாகும். எனினும் அங்குள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கான இடங்களில் 61 சதவீதம் காலியாக இருக்கிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் 138 வட்டாரங்களில் இந்த காலியிடங்கள் உள்ளன. 2018 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலின்போது, மக்கள் இங்கே தேர்தலை புறக்கணித்ததால் இக்காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. வட்டார வளர்ச்சிக் கவுன்சிலுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்பு மாநிலத் தேர்தல் ஆணையம், இவ்வாறு காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல்களை நடத்த வேண்டியது அவசியம்.

இத்தகைய கேலிக்குரிய நடவடிக்கை மத்திய அரசால் திட்டமிடப்பட்டிருக்கிறது. நாட்டின் உள்துறை அமைச்சரான அமித்ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பினைச் செய்கின்ற அதேசமயத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிராக உள்ளவர்களின் மனங்களில் மட்டும்தான் அவ்வாறு இருக்கிறது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

மருத்துவமனைகளில் சிகிச்சையிலிருக்கும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அல்லது இயங்கும் தரைவழித் தொலைபேசிகளின் எண்ணிக்கையை அவர் கூறுவதற்குப் பதிலாக, முதலில் அவர் இணையவழித் தொடர்பினை ஏன் ஏற்படுத்த முன்வரவில்லை என்பதையும், செல்பேசிகளின் பயன்பாட்டை ஏன் மீண்டும் ஏற்படுத்திடவில்லை என்பதையும், பிரதானக் கடைத்தெருக்கள் ஏன் திறக்கப்படவில்லை என்பதையும், கடைகள் ஏன் மூடியிருக்கின்றன என்பதையும், பள்ளிக்கூடங்கள் ஏன் இன்னமும் மூடி இருக்கின்றன என்பதையும், அரசாங்க அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வருவது இன்னமும் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்ன என்பதையும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஏன் இன்னமும் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்திட வேண்டும். 

இவை சாதாரணமான கட்டுப்பாடுகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இவை அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலாகும். உண்மையில்லாதவற்றைக் கூறி நாட்டின் உள்துறை அமைச்சர் நாட்டை தவறான முறையில் இழுத்துச் செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் செயல்பாடுகளுக்கான உரிமை அளிக்கப்பட்ட பின்னரே அங்கே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...